MAP

திருத்தந்தை 14-ஆம் லியோ பல்வேறு தலத்திருஅவை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை 14-ஆம் லியோ பல்வேறு தலத்திருஅவை பிரதிநிதிகளுடன் 

கிறிஸ்தவர்கள் – யூதர்களுக்கு இடையிலான சிறப்பு உறவு

நாம் கிறிஸ்துவுக்கு எவ்வளவு உண்மையுள்ளவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கிறோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்தவம் யூத மதத்தின் அடிப்படை வேர்களைக் கொண்டுள்ளதால், அனைத்து கிறிஸ்தவர்களும் யூத மதத்துடன் ஒரு சிறப்பு உறவைக் கொண்டுள்ளனர் என்றும்,  கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான ஆன்மிக பாரம்பரியத்தின் மகத்துவம் இணக்கமான அறிவையும் மதிப்பையும் ஊக்குவிக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மே 19, திங்கள்கிழமை வத்திக்கானில் திருஅவைக் குழுமங்கள், பல்சமயத்தார் மற்றும் பிற தலத்திருஅவைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான இறையியல் உரையாடல் எப்போதும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.

மோதல்கள், தவறான புரிதல்கள் நிகழும் கடினமான காலங்களில் கூட, நமது விலைமதிப்பற்ற இந்த இறையியல் உரையாடலை நாம் தொடர வேண்டியது அவசியம் என்றும், கத்தோலிக்க திருஅவைக்கும் முஸ்லீம் மதத்தாருக்கும் இடையிலான உறவுகள், உரையாடல் மற்றும் உடன்பிறந்த உணர்விற்காக வளர்ந்து வரும் அர்ப்பணிப்பால் அடையாளப்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திய வலுவான அம்சங்களில் ஒன்று உலகளாவிய உடன்பிறந்த உணர்வு என்று எடுத்துரைத்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், முந்தைய திருத்தந்தையர்கள் குறிப்பாக திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் அவர்கள், திருஅவையில் மேற்கொண்ட முன்முயற்சிகள் மற்றும் புதிய பாதைகளினால் கிடைத்த ஆற்றலினால் திருத்தந்தை பிரான்சிஸ் உடன்பிறந்த உணர்வு கொண்டவர்களாக வாழ நம்மை வலியுறுத்தினார் என்றும் கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு, பல்சமய உரையாடல், போன்றவற்றை அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற திருமடலின் வாயிலாக எடுத்துரைத்தவர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் பற்றி கூறிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், ஒருவருக்கொருவர் உறவுகளை வளர்ப்பதன் வழியாக அதைச் செய்து, திருஅவை உறவுகளிலிருந்து எந்த வகையிலும் விலகாமல், சந்திப்பின் மனிதப் பண்பு எப்போதும் மதிக்கப்படுகிறது என்பதை வலியுறுத்திய  அவருடைய சான்றுள்ள வாழ்வை, புதையலாக நாம் கருத, கடவுள் நமக்கு உதவுவாராக என்றும் தெரிவித்தார்.

அனைத்து கிறிஸ்தவர்களிடையேயும் முழுமையான ஒற்றுமையை மீண்டும் நிறுவும் பாதையில் நாம் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், நிசேயா திருச்சங்கத்தின் 1700-ஆவது ஆண்டு நிறைவை நாம் நினைவுகூர்கின்றோம் என்றும், இவ்வேளையில் நமது ஒன்றிப்பு நம்பிக்கையில் ஒன்றிணைந்ததாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

கடவுளாகிய இயேசு கிறிஸ்துவில் ஒன்றுபடும் அளவிற்கு நமது ஒன்றிப்பு உணரப்படுகிறது என்றும், நாம் கிறிஸ்துவுக்கு எவ்வளவு உண்மையுள்ளவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் கிறிஸ்துவில் ஒன்றிப்பு என்னும் நிலையை இலக்கை அடைய  செபிக்கவும்,  தூய ஆவியின் செயலால் ஒன்றிணைந்து பணியாற்றவும் அழைக்கப்படுகிறோம் என்றும் தெரிவித்த திருத்தந்தை அவர்கள்,  கூட்டொருங்கியக்கம்,  கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன என்றும் மொழிந்தார்.

உரையாடல் மற்றும் உறவின் பாலங்களைக் கட்டுவதற்கான நேரம் இது என சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு மற்றும் வாழ்க்கையின் விருப்பமாக எப்போதும் இருக்கும் கடவுளையும் அவரது விருப்பத்தையும் தேடும் பிற மத மரபுகளின் பிரதிநிதிகளுக்குத் தனது நன்றியினையும் தெரிவித்தார்.  

போர், ஆயுதங்கள் மற்றும் வன்முறைக்கும் இல்லை என்று கூறுபவர்களாக நாம் வாழவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள்,  உரையாடல் செய்பவர்களாக உறவின் பாலங்களைக் கட்டியெழுப்புபவர்களாக வாழ வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மே 2025, 14:34