MAP

திருத்தந்தை 14-ஆம் லியோ திருத்தந்தை 14-ஆம் லியோ   (ANSA)

கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்களுடன் திருத்தந்தை 14-ஆம் லியோ

கல்வியின் வழியாக மாணவர்களின் இதயங்களைத் தொட்டு, சிறந்ததைக் கொடுக்கவும், துணிவுடன் ஒவ்வொரு தடையையும் எதிர்கொள்ள அவர்களுக்கு உதவியையும் ஊக்கத்தையும் வழங்க நம்மால் முடியும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கல்வி கற்பித்தலின் வாயிலாக நற்செய்தி அறிவித்தல், நற்செய்தி அறிவித்தலின் வாயிலாக கல்வி கற்பித்தல் அவசியம் என்றும், புனித ஜொவான்னி பத்திஸ்தா தெ லசாலைப்போல கற்றலில் புதிய வழிகளைக் கண்டறிதல், கற்றலுக்கான கருவிகளை அதிகமாக்குதல், புதிய மொழிகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றிற்கானப் படிக்கட்டுகளை நம்மால் உருவாக்க முடியும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மே 15, வியாழனன்று வத்திக்கான் கிளமெந்தினா அறையில் கத்தோலிக்க பள்ளி நிறுவனங்களின் சகோதரர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை 14 -ஆம் லியோ அவர்கள், தற்போதைய நிகழ்வுகள் மீதான கவனம் மற்றும் சமூகத்தில் கற்பித்தலின் நிர்வாக மற்றும் மறைப்பணி பரிமாணம் என்னும் இரண்டு தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

திருத்தந்தை 13-ஆம் பெனடிக் அவர்கள் கத்தோலிக்க பள்ளி நிறுவனங்களுக்கான விதிகளை அங்கீகரித்த திருஅவை பிரகடனத்தின் மூன்றாம் நூற்றாண்டு (ஜனவரி 26, 1725) மற்றும், திருத்தந்தை 12-ஆம் பயஸ் புனித ஜான் த பாப்டிஸ் தெ லசால் அவர்களை  அனைத்து கல்வியாளர்களின் பாதுகாவலராக நியமித்த 75ஆவது ஆண்டு (மே 15, 1950) ஆகியவற்றை முன்னிட்டு கத்தோலிக்க பள்ளி நிறுவனங்களின் சகோதரர்களைச் சந்தித்தார் திருத்தந்தை 14ஆம் லியோ.

உங்களது பணிகள் தற்கால நிகழ்வுகள் பற்றி அதிகமாக எடுத்துரைக்கின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், புனித லசால் அவர்கள் அட்ரியன் நைல் என்ற பொது நிலையினர் ஏழைகளுக்கான பள்ளியினை பராமரிக்க வேண்டி எடுத்துரைத்த கோரிக்கையை ஏற்று உதவினார் என்றும், அம்மனிதரின் கோரிக்கையில் கடவுளின் அடையாளத்தை உணர்ந்தார், சவால்களை ஏற்றுக்கொண்டு பணியாற்றத் தொடங்கினார் என்றும் மொழிந்தார்.

இக்கால இளைஞர்கள், வாழ்க்கை, ஆற்றல், உணர்வுகள் மற்றும் அறிவாற்றலின் எரிமலைகளாக இருக்கின்றனர் என்பதை பல துறைகளில் அவர்கள் ஆற்றக்கூடிய அற்புதமான விடயங்களால் காணலாம் என்றும், இருப்பினும், நல்லிணக்கத்தை வளர்த்தல், கடந்த காலத்தை விட வித்தியாசமான முறையில், அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் விடயங்களைக் கடத்தல் போன்றவற்றிற்கு அவர்களுக்கு இன்னும் அதிகமாக நமது உதவி தேவை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

17 -ஆம் நூற்றாண்டில் இலத்தீன் மொழியின் பயன்பாடு பலருக்கு ஒரு தீர்க்கமுடியாத தொடர்புத் தடையாக இருந்தது போன்று, இன்று எதிர்கொள்ள வேண்டிய பிற தடைகள் உள்ளன என்றும், மேலோட்டமான தன்மை, தனித்துவமின்மை, உறுதியற்ற தன்மை ஆகியவற்றால் ஏற்படும் தனிமைப்படுத்தலைப் பற்றி சிந்தியுங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

புனித லசாலைப் போலவே, வழிகளைக் கண்டறிதல், கருவிகளை அதிகமாக்குதல், புதிய மொழிகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றிற்கானப் படிக்கட்டுகளை நம்மால் உருவாக்க முடியும் என்றும், இதன்  வழியாக மாணவர்களின் இதயங்களைத் தொட்டு கடவுளது அடையாளத்தின் அடிப்படையில் சிறந்ததைக் கொடுக்கவும், துணிவுடன் ஒவ்வொரு தடையையும் எதிர்கொள்ள அவர்களுக்கு உதவவும் ஊக்குவிக்கவும் முடியும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 மே 2025, 13:45