திருஅவை பயண வரலாற்றில் மறைப்பணி சங்கங்களின் பங்கு
மெரினா ராஜ் - வத்திக்கான்
பெந்தக்கோஸ்து நாளுக்குப் பின் தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் திருஅவையானது நம்பிக்கை, மகிழ்ச்சி, துணிவு போன்றவற்றை அறிக்கையிட்டு வரலாற்றில் தனது பயணத்தைத் தொடர்கின்றது என்றும், இத்தகைய பெரும் முயற்சியில் திருப்பீட மறைப்பணி சங்கங்களின் பங்கு அளவிடற்கரியது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 22, வியாழனன்று வத்திக்கானில் உள்ள கிளமெந்தினா அறையில் திருப்பீட மறைப்பணிச் சங்களின் பன்னாட்டு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் சிறப்பிக்கப்படும் உலக மறைப்பணி ஞாயிறுக்கான சிறப்பு முயற்சிகளுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நூற்று இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கூடிவந்த அனைவரையும் வரவேற்ற திருத்தந்தை அவர்கள், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு அவர்கள் அளித்து வரும் இன்றியமையாத பணிக்காக தனது நன்றியினையும் தெரிவித்தார்.
பெந்தக்கோஸ்து என்னும் நாளில் சீடர்கள் மேல் பொழியப்பட்ட தூய ஆவியால் வழிநடத்தப்படும் திருஅவையானது இயேசுவின் பெயரையும் நற்செய்தியின் நற்செய்தியின் உண்மையைக் காக்க நம்பிக்கையில் பிறந்த மீட்பையும் கொண்டுள்ளது என்றும், நம்பிக்கை, மகிழ்ச்சி, துணிவு போன்றவற்றை அறிக்கையிட்டு வரலாற்றில் தனது பயணத்தைத் தொடர்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர்களாக நாம் பெறும் ஒற்றுமையைப் புரிந்துகொள்வது என்பது, திருஅவை நற்செய்திப் பணியின் உலகளாவிய பரிமாணத்திற்கு நம்மைத் திறக்கிறது என்றும், மேலும் ஒவ்வொரு நாடு மற்றும் மக்களுடன் கடவுளாகிய இயேசுவைப் பற்றிய ஒப்பற்ற செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக, நமது தனிப்பட்ட தலத்திருஅவைகள், மறைமாவட்டங்கள் மற்றும் நாடுகளின் எல்லைகளைக் கடந்து செல்ல நம்மைத் தூண்டுகிறது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
திருஅவையின் ஒற்றுமை, உலகளாவிய தன்மை மீதான புதுப்பிக்கப்பட்ட கவனம் போன்றவை திருப்பீட மறைப்பணிச் சங்கங்களின் உண்மையான தனிவரத்தினை ஒத்திருக்கிறது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உலகளாவிய சங்கங்களின் உறுப்பினர்களை, இறைமக்களிடையே மறைப்பணி பேரார்வத்தின் புளிக்காரமாக இருந்து அழைத்தலில் திருஅவையின் ஒற்றுமை உறுதிப்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
அனைத்து மக்களிடையே நம்பிக்கையின் மறைப்பணியாளர்களாக இருக்க வேண்டும் என்று அவர்களை ஊக்குவித்த திருத்தந்தை அவர்கள், திருஅவையின் தாயான அன்னை மரியின் அன்பான பரிந்துரையை நாடி, கடவுளுக்குள் நீடித்த மகிழ்ச்சி மற்றும் அமைதியை அடைய அவர்களுக்கு தன் ஆசீரினை வழங்குவதாகவும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்