MAP

வத்திக்கான் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி நிகழ்வுகள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 10.30 மணியளவில் அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.00 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியானது, வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலின் தலைமை அருள்பணியாளராக 16 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்திரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஏறக்குறைய 28 கர்தினால்கள், 18 ஆயர்கள், 266 அருள்பணியாளர்கள், வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் இருந்து வத்திக்கான் வளாகத்திற்கு பவனிவர வருகைப் பாடலுடன் திருப்பலியானது ஆரம்பமானது. கர்தினால் கொமாஸ்திரி அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து இலத்தீன் மொழியில் திருப்பலியினைத் துவக்கினார். ஏறக்குறைய 50ஆயிரம் மக்கள் வத்திக்கான் வளாகத்தைச் சூழ்ந்திருந்தனர். இத்தாலி மற்றும் ஹாலந்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஏராளாமான வண்ண மலர்களால் வத்திக்கான் வளாகம் அழகுபடுத்தப்பட்டிருந்தது. திருப்பலியின் முதல் வாசகமானது ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருப்பாடலினை சிஸ்டைன் சிற்றாலயப் பாடகர் குழுவினர் பாடலாகப் பாடினர். அதன்பின் இரண்டாம் வாசகமானது பிரெஞ்சு மொழியில் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நற்செய்தி வாசகமானது இத்தாலிய மொழியில் வாசிக்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைக் கருத்துக்களை கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்திரி அவர்கள் இறைமக்களுக்கு எடுத்துரைத்தார்.

திருத்தந்தையின் மறையுரைக் கருத்துக்கள்

வாரத்தின் முதல் நாளில் மகதலா மரியா இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்று பார்த்தபோது கல் அகற்றப்பட்டிருப்பதைக் காண்கின்றார். எனவே அதனை சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த சீடரிடமும் எடுத்துரைக்க ஓடுகின்றார். இதனைக் கேட்ட சீடர்கள் இருவரும் ஒருமித்து கல்லறையை நோக்கி ஓடுகின்றனர். அவர்களின் இத்தகைய ஓட்டம் இயேசுவின் உடலை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்ற கவலையை வெளிப்படுத்துகின்றது.  மகதலா மரியா, பேதுரு, யோவான் ஆகியோரின் உள்ளத்து விருப்பம், இயேசுவைத் தேடிக் கண்டடைய வேண்டும் என்பதாக இருந்தது. இயேசு உண்மையாக உயிர்த்தெழுந்தார். வாழ்கின்றார், இரவின் சிறையில் அவர் அடைக்கப்படவில்லை. கடந்த காலத்தின் நாயகனாகவோ, அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் சிலையாகவோ அவரை நினைக்க முடியாது. மாறாக, உயிர்த்தெழுந்த அவரை, வாழும் அவரை, நமது அன்றாட வாழ்வில், உடன் வாழும் சகோதர சகோதரிகளிடத்தில் நாம் தேட வேண்டும்.

இயேசுவைத் தேடுபவர்களாக நாம் எப்போதும் இருக்கவேண்டும். இயேசு நம்முடன் இருக்கின்றார். துன்புறும் மனிதர்களில், அவர்களில் விடும் கண்ணிரில் அவர் இருக்கின்றார். அவரை நாம் அடையாளம் காணவேண்டும். நமது அன்பின் சிறிய செயல்கள் வாயிலாக, நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் அழகுபடுத்தி பெருக்குகின்றார் இறைவன். உயிர்ப்பின் நம்பிக்கையானது மகதலா மரியா, சீமோன் பேதுரு, யோவான் போல இயேசுவை நாம் பிற இடங்களில் தேட அழைப்புவிடுக்கின்றது. மகதலா மரியா போல நாமும் சில நேரங்களில் இயேசுவைக் காணாமல் தவிக்கலாம். ஆனால், அவரைத் தேடிக் கண்டடையவும், அவர் நிச்சயம் நம்மால் கண்டறியப்படுவார் என்ற நம்பிக்கையில் உறுதியூட்டப்படவும், அவரது உயிர்ப்பின் ஒளியால் ஒளியூட்டப்படவும் நாம் அழைக்கப்படுகின்றோம்.

சகோதர சகோதரிகளே, ஏழையாகவும், உடையக்கூடிய மற்றும் காயமடைந்த கிறிஸ்துவை நாம் பற்றிக்கொண்டு நமது வாழ்வை நாம் வாழ முடியும் என்பதே நம் வாழ்க்கையின் மிகப்பெரிய நம்பிக்கை. ஏனெனில் அவரே மரணத்தை வென்றார், நம் வாழ்வின் இருளை வென்றவர், உலகத்தின் இருளை வெல்பவர். திருத்தூதர் பவுல் கூறுவது போல, “நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்” என்பதை உணர்ந்து வாழ்வோம்.   

நமது இந்த எதிர்நோக்கு என்னும் பரிசை நம்மில் புதுப்பிக்கவும், நமது துன்பங்களையும் கவலைகளையும் அதில் மூழ்கடிக்கவும், வாழ்வின் வழியில் நாம் சந்திப்பவர்களுக்கு அதனை எடுத்துரைக்கவும், நமது வாழ்க்கையின் எதிர்காலத்தையும் மனிதகுலத்தின் விதியையும் இத்தகைய எதிர்நோக்கில் ஒப்படைக்கவும் இந்த யூபிலி ஆண்டு நம்மை அழைக்கிறது. மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாய், இயேசுவைச் சந்திக்க ஓடுவோம், அவருடைய நண்பர்களாக இருப்பதன் விலைமதிப்பற்ற அருளை மீண்டும் கண்டுபிடிப்போம். அவரது வாழ்க்கை வார்த்தை மற்றும் உண்மை நம் பாதையை ஒளிரச் செய்யட்டும்.

இவ்வாறாக திருத்தந்தையின் மறையுரைக் கருத்துக்களை கர்தினால் ஆஞ்சலோ அவர்கள் நிறைவுசெய்தார்.

அரபு, இஸ்பானியம், இரஷ்யம், போர்த்துக்கீசியம், சீனம் ஆகிய மொழிகளில் நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து திருநற்கருணை வழிபாடானது ஆரம்பமானது.

திருப்பலி நிறைவில் உயிர்ப்புப்பெருவிழா வாழ்த்துக்களையும், இறுதி ஆசீரினையும் இறைமக்களுக்கு கர்தினால் கொமாஸ்திரி அவர்கள் எடுத்துரைத்ததுடன் திருப்பலியானது விண்ணக அரசியாம் அன்னை மரியாவின் பாடலுடன் நிறைவிற்கு வந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஏப்ரல் 2025, 12:21