திருத்தந்தையின் மறைவிற்குப் பல்வேறு அமைப்புகள் இரங்கல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அவர் ஆற்றிய நற்பணிகளுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
ஒதுக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு:
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இடம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழைகளுக்கு அளித்த வலுவான ஆதரவிற்காக அவரை நினைவுகூர்ந்து தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளன இயேசு சபையின் புலம்பெயர்ந்தோர் பணியகம் மற்றும் கத்தோலிக்கக் குழந்தைகள் நல அமைப்பு.
மேலும், இடம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழைகளின் போராட்டங்களைக் கவனத்தில் கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் முதன்மைப்படுத்திப் பாராட்டியுள்ளன.
அமைதி மற்றும் அகிம்சையை ஊக்குவித்தல்:
இரக்கம், அமைதி மற்றும் அகிம்சையை ஊக்குவிப்பதற்கான திருத்தந்தையின் அர்ப்பணிப்பை பல இரங்கல் செய்திகள் வலியுறுத்துகின்றன, சிறப்பாக, உலகளாவிய நல்லிணக்கத்திற்கான அவரது அழைப்புகள் மற்றும் ஈராக், சிரியா மற்றும் நைஜீரியா போன்ற மோதல் பகுதிகளில் அவரது பணிகள் வழியாக இவைகள் வெளிப்பட்டதை இவ்விரங்கல் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
குறிப்பாக, பாக்ஸ் கிறிஸ்டி (Pax Christi) எனப்படும் அனைத்துலகக் கத்தோலிக்க அமைதி இயக்கம் மற்றும் பிற அமைப்புகள் வன்முறைக்கு எதிரான திருத்தந்தையின் நிலைப்பாட்டையும், தீவிர அகிம்சை மீதான அவரது முக்கியத்துவத்தையும் தங்கள் இரங்கல் செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளன.
இயற்கையைப் பேணுதல் :
'இறைவா உமக்கே புகழ்' (Laudato si') என்ற திருமடல் மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு யாவும் அவரது மரபின் (legacy) குறிப்பிடத்தக்க அம்சங்களாகும் என்றும், இம்மரபு, Laudato si' இயக்கம் மற்றும் விலங்குகளுக்கான கத்தோலிக்க அக்கறையின் வழியே ஒப்புக்கொள்ளப்படுகிறது என்றும் இந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கை மற்றும் நல்லிணக்கம்:
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நம்பிக்கையின் செய்தி, குறிப்பாக விரக்தியின் காலங்களில், மீண்டும் மீண்டும் வரும் கருப்பொருளாக அமைந்துள்ளது என்றும், உரையாடல், ஒன்றிப்பு மற்றும் அமைதி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான அவரது அழைப்பு பலரை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது என்றும் இந்த இரங்கல் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இவ்விரங்கல் செய்திகள் முழுவதும், திருத்தந்தையின் இறப்பு ஆழ்ந்த துக்கத்தால் குறிக்கப்படுகிறது, என்றாலும், நீதி, இரக்கம் மற்றும் படைப்பின் மீதான அக்கறைக்காக வாதிடும் அவரது பணியைத் தொடர்வதற்கான ஓர் உறுதிப்பாட்டையும் கொண்டுள்ளது என்பதை மறப்பதற்கில்லை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்