MAP

திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம்  

உடல்நிலையில் முன்னேற்றத்தைக் காட்டும் இரத்தப்பரிசோதனை முடிவுகள்

திருத்தந்தைக்கு ஆக்ஸிஜனேற்றத்தின் அளவு சிறிது குறைக்கப்பட்டுள்ளதாகவும், பகலில் இயல்பான ஆக்சிஜனேற்றமும் இரவில் தேவைக்கேற்ப அதிக அளவிலான ஆக்சிஜனேற்றம் மூக்கு வழியாகவும் வழங்கப்பட்டு வருகின்றது என்றும் திருப்பீடத்தகவல் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு வாரங்களாக வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அண்மைய இரத்தப்பரிசோதனை தரமதிப்பீடுகள் மற்றும் முடிவுகள் அவரின் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன என்று திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 4, வெள்ளிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு அளித்துள்ள தகவலில் இவ்வாறு தெரிவித்துள்ள திருப்பீடத்தகவல் தொடர்பகமானது, திருத்தந்தைக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து மருத்துவ சிகிச்சை முறைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், இயற்கையாக சுவாசிக்கும் திறன் மற்றும் பேசும் திறன் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், இன்று வரை, ஞாயிறு மூவேளை செப உரை, புதன் மறைக்கல்வி உரை, சிறப்புக் குழுக்களுக்கான உரை ஆகியவற்றை எழுத்துப்படிவத்தில் வழங்கி வந்த நிலையில் வரும் ஏப்ரல் 6, ஞாயிறு மூவேளை செப உரையில் சிறிது மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

திருத்தந்தைக்கு ஆக்ஸிஜனேற்றத்தின் அளவு சிறிது குறைக்கப்பட்டுள்ளதாகவும், பகலில் இயல்பான ஆக்சிஜனேற்றமும் இரவில் தேவைக்கேற்ப அதிக அளவிலான ஆக்சிஜனேற்றம் மூக்கு வழியாகவும் வழங்கப்பட்டு வருகின்றது என்றும் திருப்பீடத்தகவல் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

ஓய்வில் இருந்தாலும் திருத்தந்தை அவர்கள் தனது அலுவலக பணியினைத் தொடர்ந்து ஆற்றிவருகின்றார் என்றும், ஏப்ரல் 4 வெள்ளிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற தவக்கால தியானத்தில் காணொளி வாயிலாக பங்கேற்றார் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அண்மைய இரத்த பரிசோதனையின் தரமதிப்பீடுகள் நன்முறையில் இருப்பதாகவும் அவை திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஏப்ரல் 2, புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் இறந்த 20ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் காணொளி வாயிலாகப் பங்கேற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் உடல் நிலை கருதி தனிப்பட்ட சந்திப்புக்கள் எதுவும் இல்லை என்றும், திருத்தந்தையின் புனித வார செயல்பாடுகள் பற்றிய எந்த ஒரு முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் திருப்பீடத்தகவல் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஏப்ரல் 2025, 10:06