குடும்ப அன்பின் அழகு, வலிமையைச் சுட்டிக்காட்டியவர் திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
பொம்பே அன்னை மரியா திருத்தல இறைமக்களின் இரங்கல்
இத்தாலியின் பொம்பே அன்னை மரியா திருத்தலத்தின் ஆலய மணிகள் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒலிக்கப்பட்டன. 2015-ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று, பொம்பே திருத்தலத்திற்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியா திரு உருவத்தின் முன் நின்று செபித்த செபமானது, இறைமக்களால் உருக்கமாக செபிக்கப்பட்டது திருத்தலத்தில் செபித்து அங்கிருந்து விடைபெறும் முன் இறைமக்களைப் பார்த்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “நாம் அன்னை மரியாவிடம் நமது செபத்தினை எடுத்துரைத்துவிட்டோம், அவர் நம் அனைவருக்கும் ஆசீர் அளிப்பார். உங்களுக்கும் எனக்கும், இந்த உலகம் முழுவதற்கும் ஆசீரளிப்பார். ஏனெனில் அவரே நம்மைப் பாதுகாக்கின்றவர். எனக்காக செபிக்க மறவாதீர்கள்” என்று கூறிய அவரின் வார்த்தைகளை இறைமக்கள் நினைவு கூர்ந்தனர்.
மேலும் திருத்தந்தைக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்றும், இன்று விண்ணகத் தந்தையுடனும் அன்னை மரியாவுடனும் விண்ணகத்தில் இருக்கும் திருத்தந்தை நமக்காகத் தொடர்ந்து செபிப்பார் என்றும் கூறி தங்களது செபத்தினை அர்ப்பணித்தனர் திருத்தலத்தில் கூடியிருந்த இறைமக்கள்.
லாத்ஷியோ குடும்பங்களுக்கான இயக்கத்தாரின் இரங்கல்
குடும்பங்களின் இதயங்களை எளிமையான, ஆழமான மற்றும் உண்மையான வார்த்தைகளால் எவ்வாறு பேசுவது என்பதை அறிந்த ஆன்மிக வழிகாட்டியான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகின்றது என்றும், தனது பதவிக்காலம் முழுவதும் திருஅவை மற்றும் சமூகத்தின் மையமாக குடும்பத்தை வைத்தவர் என்றும் எடுத்துரைத்துள்ளது இத்தாலியின் லாத்ஷியோ குடும்ப இயக்கம்.
‘அன்பின் மகிழ்வு’ (Amoris Laetitia) என்னும் திருத்தூது அறிவுரை மடலில் குறிப்பிட்டுள்ளது போல குடும்பங்களில், ஒன்றிணைந்து நடத்தல், தெளிந்து தேர்தல், பகுத்தறிவுடன் வாழ்தல், ஒருங்கிணைப்பின் பாதைகள் போன்றவற்றைத் திறந்துள்ளார் என்றும், அன்றாட வாழ்வில் உயிரோட்டமாக இருக்கும் குடும்ப அன்பின் அழகையும் வலிமையையும் தொடர்ந்து சுட்டிக்காட்டியவர் திருத்தந்தை என்றும் தெரிவித்துள்ளது அவ்வியக்கம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியது போல, மக்களை நோக்கிச் செல்லும் திருஅவையாக, குடும்பங்களின் மகிழ்ச்சியான, இக்கட்டான, துயரமான தருணங்களிலும் அவர்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டவர்களாக வாழ முயல்வோம் என்றும், பெற்றோர்கள், குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் நமது சமூகத்தை உயிர்ப்புள்ளதாகவும் மனிதாபிமானமாகவும் மாற்றும் ஒவ்வொரு வகையான பிணைப்பிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளது லாத்ஷியோவின் குடும்பங்களுக்கான இயக்கம்.
இறுதியாக, இறைத்தந்தையின் அரவணைப்பில் திருத்தந்தையின் ஆன்மாவை அன்புடனும் நன்றியுடனும் அர்ப்பணித்து செபிப்பதாகக் கூறியுள்ள அவ்வியக்கமானது, தங்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்த எல்லா நன்மைகளுக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளது.
இத்தாலியக் கிறிஸ்தவத் தொழிலாளர் அமைப்பினரின் (ACLI ) இரங்கல்
திருத்தந்தை கடினமான காலங்களில் எதிர்நோக்கின் ஒளியாக, நம் காலத்து ஆண்கள் மற்றும் பெண்கள், நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையற்றவர்கள் என அனைவர் இதயங்களுடனும் பேசக்கூடிய ஆன்மிக வழிகாட்டியாக இருந்தவர் என்றும், தாழ்ச்சி, உடனிருப்பு, மனிதகுலத்தின் மீதான அன்பு ஆகியவற்றைக் கொண்ட அவரது சாட்சிய வாழ்வானது, வரலாற்றிலும், அனைவரின் இதயங்களிலும் பொறிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது இத்தாலியக் கிறிஸ்தவத் தொழிலாளர் அமைப்பு.
நமது நகரம், மறைமாவட்டத்தின் புவியியல் மற்றும் இருத்தலியல் எல்லைகளை நோக்கிய அவரது நிலையான பார்வை, மிகவும் ஒடுக்கப்பட்டவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்தல் போன்றவற்றில் நம் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கமாக அவர் திகழ்ந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது இவ்வமைப்பு.
“உண்மையான ஆற்றல் என்பது பணியே” என வலியுறுத்தி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறுதல் அடையட்டும் என்றும், தனது போதனை மற்றும் பணியின் வாயிலாக ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்குவதை வலியுறுத்திய திருத்தந்தையின் ஆன்மாவை இரக்கமுள்ள தந்தையின் கரங்களில் ஒப்படைத்து செபிப்போம் என்றும் உரைத்துள்ளது அவ்வமைப்பு.
உரோமைத் திருப்பீட திருச்சிலுவைக் கல்லூரி இரங்கல்
இரக்கம், நீதி மற்றும் அமைதியின் சான்றாகவும், அயராது உழைக்கும் மேய்ப்பராகவும் திகழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், தனது வாழ்நாள் முழுவதும் நற்செய்திப் பணிக்காக உழைத்து, திருஅவைக்கும் உலகிற்கும் அன்பின் பாதையையும் வலுவற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கான பாதையையும் காட்டியவர் என்றும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது திருப்பீடத் திருச்சிலுவைக் கல்லூரி.
நற்செய்தியின் மகிழ்ச்சியை அறிவிப்பதிலும், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதிலும் மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்பட்ட அவரது வார்த்தைகள் நமது இதயங்களையும் மனசாட்சியையும் தொட்டு, கிறிஸ்துவே நமது வாழ்வின் எதிர்நோக்காகவும் முதன்மையாகவும் இருப்பவர் என்பதை எப்போதும் சுட்டிக்காட்டியது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்