உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்பு திருப்பலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
உயிர்ப்பு உன்னதமானது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பாடுகள் பட்டு இறந்து உயிர்த்ததால் தான் நமது நம்பிக்கை புதுபிறப்பெடுக்கின்றது. இயேசு நமக்காக உயிர்த்தார் என்ற நம்பிக்கையில் ஆழப்பட்டவர்களாய் நாம் வாழவும், நமது வாழ்வை நம்பிக்கையின் சான்றாக மாற்றவும், இந்த உயிர்ப்பு நாளில் இறைவன் நம்மை அழைக்கின்றார் என்பதை உணர்ந்து வாழ்வோம்.
ஏப்ரல் 19, சனிக்கிழமை மாலை உரோம் உள்ளூர் நேரம் மாலை 7.30 மணியளவில் அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 11. 00 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்பு திருப்பலியானது கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருவிழிப்பு திருச்சடங்கில் இடம்பெறும் திருஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகியவை இடம்பெற்றன. திருஒளி வழிபாட்டில் புதிய நெருப்பானது உண்டாக்கப்பட்டு பாஸ்கா திரிகள் ஏற்றப்பட்டன. பெருங்கோவிலின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, புதிய நெருப்பினால் உண்டாக்கப்பட்ட கிறிஸ்துவின் ஒளியினால் மீண்டும் பெருங்கோவில் ஒளி வீசியது. இறைவார்த்தை வழிபாட்டில் தொடக்கநூலின் படைப்பு முதல் திருவெளிப்பாடு வரை விவிலியத்தில் உள்ள இறைவனின் மகிமையையும் மாண்பையும் எடுத்துரைக்கும் வாசகங்கள் வாசிக்கப்பட்டன. ஒவ்வொரு வாசகத்தின் இறுதியிலும் திருப்பாடல்கள் பாடலாகப் பாடப்பட்டதைத் தொடர்ந்து, இயேசுவின் உயிர்ப்பு எடுத்துரைக்கப்பட்டு, உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக என்ற வானவர் கீதம் பாடப்பட்டதும் பெருங்கோவிலின் மணிகள் அனைத்தும் ஒலிக்கப்பட்டன. நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரையினை கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் இறைமக்களுக்கு எடுத்துரைத்தார்.
உயிர்ப்பு என்பது எந்த விதமான சத்தமும் எழுப்பாமல், சில சமயங்களில் இருள் சூழ்ந்த சூழல் மற்றும் அவநம்பிக்கையால் அச்சுறுத்தப்பட்டாலும், சிறிது சிறிதாக முன்னேறி தங்கள் வழியை நோக்கிச் செல்லும் சிறிய ஒளி வீசும் தளிர்களைப் போன்றது என்று கூறினார். இயேசுவின் உயிர்ப்பு என்னும் ஒளி நிறைந்த தளிர் நம் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், அதனை கவனமாகப் பாதுகாத்து வளரச்செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் வலியுறுத்தினார். இந்த உலகம் வன்முறை மற்றும் தீமைகளால் மிகக்கொடியதாக மாறினாலும், கடவுள் நமது வாழ்க்கைப் பாதையில் நம்மோடு கூட நடக்கின்றார் என்னும் மகிழ்வின் நற்செய்தியை இயேசுவின் உயிர்ப்புப்பெருவிழா நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், உயிர்ப்பின் ஒளிக்கு நமது வாழ்வில் இடம்கொடுப்போம், இவ்வுலகில் எதிர்நோக்கை உருவாக்குபவர்களாக நாம் மாறுவோம் என்றும் கூறி திருத்தந்தையின் மறையுரைக்கருத்துக்களை நிறைவு செய்தார் கர்தினால் பத்திஸ்தா ரே.
திருமுழுக்கு வழிபாட்டின்போது மூன்று பேருக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்கினார் கர்தினால் ரே. இறைமக்கள் அனைவரும் தங்களது திருமுழுக்கு வார்த்தைப்பாட்டினை புதுப்பித்துக் கொண்டனர். நற்கருணை வழிபாட்டின் இறுதியில் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா ஆசீரினை கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் வழங்க திருவிழிப்புத் திருப்பலியானது அன்னை மரியின் பாடலுடன் நிறைவுற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்