MAP

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடக்கம் செய்யப்படவிருக்கும் கல்லறை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடக்கம் செய்யப்படவிருக்கும் கல்லறை  (ANSA)

திருத்தந்தையின் முன்னோர் பகுதியிலிருந்து கல்லறைக்கு பளிங்கு கல்

மேரி மேஜர் பெருங்கோவிலில் அன்னைமரியாவின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கும் சிற்றாலயம் திருத்தந்தை ஐந்தாம் பவுல் அவர்களால் கட்டப்பட துவங்கியதால் பவுலின் சிற்றாலயம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே எழுதி வைத்துள்ள அவரின் விருப்பப்படி வத்திக்கானுக்கு ஏறக்குறைய 5 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் ஏப்ரல் 26, சனிக்கிழமையன்று அடக்கம் செய்யப்பட உள்ளார்.

பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடிச் சென்று செபிக்கும் அன்னை மரியா திரு உருவப்படம் உள்ள சிற்றாலயத்திற்கு அருகில் வெகு எளிமையானதாக கல்லறை தயாரிக்கப்பட்டுள்ளது.

இலத்தீன் மொழியில் திருத்தந்தையின் பெயர் “பிரான்சிஸ்குஸ்” என்று மட்டுமே பொறிக்கப்பட்டுள்ள இந்த கல்லறைக்கான பளிங்கு கற்கள் இத்தாலியின் லிகூரியா மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

அர்ஜென்டினா நாட்டிற்கு குடிபெயருமுன்னர் இத்திருத்தந்தையின் தாத்தா பாட்டி இந்த மாநிலத்திலேயே வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேரி மேஜர் பெருங்கோவிலுக்குள் Salus Populi Romani என்ற பெயரில் அன்னை மரியா திரு உருவப்படம் வைக்கப்பட்டிருக்கும் பவுல் சிற்றாலயத்திற்கும் Sforza சிற்றாலயத்திற்கும் இடையே திருத்தந்தையின் கல்லறை இடம்பெற உள்ளது.

அன்னைமரியாவின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கும் சிற்றாலயம் 1611ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் பவுல் அவர்களால் கட்டப்பட துவங்கியதால் பவுலின் சிற்றாலயம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.

இச்சிற்றாலயத்திற்கு அருகில் இருக்கும் Sforza சிற்றாலயம் இரு சகோதர கர்தினால்களின் கல்லறைகளைத் தாங்கி நிற்கிறது. குய்தோ அஸ்கானியோ ஸ்போர்சா மற்றும் அலசாந்திரோ ஸ்போர்சா என்ற இரு கர்தினால் சகோதரர்கள் பிரபல கலைஞர் மைக்கலாஞ்சலோ அவர்களின் துணையுடன் இச்சிற்றாலயத்தை வடிவமைக்கத் துவங்கினர். அவர்களின் குடும்பப் பெயரால் இந்த சிற்றாலயம் அறியப்படுகிறது.

இவ்விரு சிற்றாலயங்களுக்கும் இடையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறை தரையில் மிக எளிமையாக இடம்பெற உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஏப்ரல் 2025, 15:20