சாந்தோ தொமிங்கோவின் விபத்தில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தை இரங்கல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
டொமினிக்கன் குடியரசின் தலைநகர், சாந்தோ தொமிங்கோவில் இரவு விடுதி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 10, வியாழக்கிழமை இன்று, சாந்தோ தொமிங்கோ பேராயர் Francisco Ozoria Acosta அவர்களுக்கு அனுப்பியுள்ள இந்த இரங்கல் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சம்பவத்தால் தான் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாக மொழிந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குறிப்பாக, காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் நலமடைய வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் உரைத்துள்ளார்.
இவ்வேளையில், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் தான் உற்சாகப்படுத்துவதாகவும், இச்சம்பவத்தால் துயருறும் அனைவரையும் அன்னை கன்னி மரியாவின் பரிந்துரை செபத்தில் ஒப்படைப்பதாகவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகவும் கூறி தனது இரங்கல் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
ஏப்ரல் 8, இச்செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட மெரெங்கு இசை நிகழ்ச்சியின் போது டொமினிகன் தலைநகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் இந்தப் பெருந்துயர் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்நிகழ்வில் குறைந்தது 113 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பதையும் அச்செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்