புதன் மறைக்கல்வி உரை - இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஏப்ரல் 9 புதன்கிழமை “இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர்” என்ற மாற்கு நற்செய்தியில் இடம்பெறும் கருத்துக்களை அடிப்படையாக வைத்து “இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கினார் என்ற தலைப்பில் தனது புதன் மறைக்கல்வி உரையினை எழுத்துப்படிவத்தில் வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நிக்கோதேமு, சமாரியப்பெண், சக்கேயு ஆகியோரைக் குறித்துக் கடந்த வாரங்களில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று அதன் நான்காவது தலைப்பில் இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர் பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மாற்கு 10: 17-22
இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட” என்றார். அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில், அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை
அன்பானவர்களே
இயேசுவின் சந்திப்புக்களில் இன்று நாம் காண இருப்பது, அவரைப் பின்பற்றிய விரும்பிய செல்வர் பற்றியது. இந்த செல்வந்தருக்கு நற்செய்தியில் பெயர் ஒன்றும் கொடுக்கப்படவில்லை. நற்செய்தியாளர் மாற்கு அவரை வழியில் வந்த ஒருவர் என்று குறிப்பிடுகின்றார். அவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து வந்தவர் என்றும் எடுத்துரைக்கின்றார். இருப்பினும் தனது வாழ்விற்கான அர்த்தத்தை அவர் கண்டறியவில்லை. மாறாக அதைத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு நபராகவே இருக்கின்றார். ஓர் உறுதியான நபராகத் தோன்றினாலும், இறுதிவரை தனது முடிவை எடுக்கமுடியாதவராக இருக்கின்றார். உண்மையில், நாம் செய்யும் செயல்கள், தியாகங்கள் அல்லது நாம் பெறும் வெற்றிகளுக்கு அப்பால் உண்மையில், மிக முக்கியமானது நாம் நம் இதயங்களில் சுமந்து செல்லும் மகிழ்ச்சி தான். ஒரு கப்பலானது தான் இருக்கும் நிலையிலிருந்து புறப்பட்டு திறந்த பரந்த கடலை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றால், அது தன்னை பிடித்து வைத்திருக்கும் சங்கிலிகள், நங்கூரங்களிலிருந்து முதலில் விடுபட வேண்டும். இல்லையெனில் எவ்வளவு தான் சிறப்பான அழகான, ஆடம்பரமான கப்பலாக இருந்தாலும் தன்னை இழுத்துப்பிடித்துக் கொண்டிருக்கும் கட்டுக்களைக் களையவில்லை என்றால் கடலில் ஒருபோதும் அதனால் பயணிக்க முடியாது. இந்த செல்வரும் அப்படித்தான். தனக்கென ஒரு அழகான ஆடம்பரமான கப்பலை உருவாக்கியவர். ஆனால் துறைமுகத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கி விடுகின்றார்.
இயேசு தனது வழியில் செல்லும்போது, இந்த செல்வர் அவரிடம் ஓடி, அவர் முன் முழந்தாள்படியிட்டு, "நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிறார். "நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்ற வினைச்சொற்களை நாம் சற்று சிந்திப்போம். கட்டளைகளைக் கடைப்பிடிப்பது, செல்வருக்கு மீட்பின் மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் கொடுக்காததால், அவர் போதகராகிய இயேசுவிடம் திரும்புகிறார். செல்வர் தனது வாழ்வில், கடவுளின் அளப்பரிய, பெருந்தன்மையான மனம் என்ற சொல்லின் அர்த்தத்தை அறிந்துக்கொள்ளவில்லை. மாறாக, எல்லாமே அவருக்கு உரியதாக கடமையாகத் தெரிகின்றது. நிலை வாழ்வு என்பது அவரைப் பொறுத்தவரையில் ஒரு விடுதலை, கடமைகளை சரியாகக் கடைப்பிடிப்பதன் வழியாக சரியான முறையில் பெறப்படும் ஒன்று. இந்த வழியில் வாழும் வாழ்க்கையில், உறுதியாக நன்மை இருந்தாலும், அங்கு அன்பிற்கு இடம் இருப்பதில்லை.
எப்போதும் போல, இயேசு அவரின் தோற்றத்திற்கு அப்பால் சென்று அவரது உள்ளத்தைப் பார்க்கின்றார். செல்வர் தனது சிறந்த விண்ணப்பத்தை இயேசுவின் முன் வைக்கும்போது, இயேசுவோ அவர் உள்ளத்தைப் பார்க்கிறார். நற்செய்தியாளர் மாற்கு பயன்படுத்தும் வினைச்சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இயேசு அவரை அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கினார் என்று எடுத்துரைக்கின்றார். இயேசு நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் பார்க்கின்றார். நாம் இருப்பது போலவே நம்மை அன்பு செய்கின்றார். கவனச்சிதறல்கள் மற்றும் பாவங்கள் இருந்தபோதிலும், இயேசு நம் உள்ளத்தைப் பார்த்து நம்மை அன்பு செய்கின்றார். அவர் நம் பலவீனத்தையும், நாம் இருப்பது போலவே அன்புசெய்யப்பட வேண்டும் என்ற நமது விருப்பத்தையும் காண்கிறார்.
இயேசு செல்வரை, தன்னைப் பின்பற்றுவதற்கான அழைப்பை வழங்குவதற்கு முன்பே அன்பு செய்கின்றார். அவர் இருக்கும் நிலையிலேயே அவரை அன்பு செய்கின்றார். இயேசுவின் அன்பு இலவசமானது. செல்வர் தன் மனதில் நினைத்திருந்த கருத்தியல்களுக்கு முரணானது. இலவசமாக கிடைக்கப்படும் கடவுளின் அருளால் நாம் அன்பு செய்யப்படுகின்றோம் என்பதை உணரும்போது உண்மையிலேயே நாம் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது நம் உறவுகளிலும் ஒருவருக்கொருவர் நாம் காட்டும் அன்பிலும் வெளிப்படுகின்றது. நாம் ஒருவரிடமிருந்து அன்பைப் பெற முயற்சிக்கும் போதும், அன்பிற்காக ஏங்கும்போதும், அந்த உறவுகள் ஒருபோதும் நம்மை மகிழ்ச்சியாக உணர வைக்காது.
செல்வர் தான் வாழ்கின்ற வாழ்க்கை முறையையும், கடவுளுடன் தொடர்பு கொள்ளும் விதத்தையும் மாற்றும் வகையில் இயேசு அவருக்கு அறிவுரை வழங்குகின்றார். ஒரு பரிந்துரையைத் தருகின்றார். நம் அனைவரையும் போலவே, அவருக்குள்ளும் ஒரு குறைபாடு இருப்பதை இயேசு ஏற்றுக்கொள்கிறார். இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக இயேசு, அங்கீகாரம், அன்பு, பரிந்துரை ஆகியவற்றை பொருள்கொடுத்து "வாங்க" தேவையில்லை; மாறாக அதற்கு பதிலாக, நம் இதயங்களை விடுதலையாக்க, நம்மைச் சுமையாக்கிக் கொண்டிருக்கும் அனைத்தையும் பிறருக்குக் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கின்றார். நமக்காக என்று எதையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, மாறாக ஏழைகளுக்குக் கொடுக்கவும், அவர்களுக்கு எல்லாவற்றையும் கிடைக்கச் செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
இறுதியாக, இயேசு செல்வரைத் தனியாக விட்டு விடாமல் தன்னைப் பின்பற்றவும், ஒரு பிணைப்புக்குள் இருக்கவும், ஓர் உறவில் வாழவும் அவரை அழைக்கிறார். இந்த வழியில் மட்டுமே, பெயர் தெரியாத நிலையில் இருந்து ஒருவர் உண்மையில் வெளியே வர முடியும். நம்மை அழைக்கும் ஓர் உறவுக்குள் மட்டுமே நம் பெயர் சொல்லி நாம் அழைக்கப்படுவதை நம்மால் கேட்க முடியும். நாம் தனியாக இருந்தால், பெயர் சொல்லி அழைக்கப்படுவதை நாம் ஒருபோதும் கேட்க முடியாது. மாறாக, வழியில் வந்த ஒருவராகவோ அல்லது பெயர் தெரியாதவராகவோ மட்டுமே நம்மால் இருக்க முடியும். தன்னிறைவு பெற்ற மற்றும் தனித்துவம் பெற்ற கலாச்சார உலகில் வாழும் நாம், இக்காலத்தில் நம்மை முழுமையாக அன்பு செய்யும் ஒருவர், நம் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்க இயலாமல் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கின்றோம்.
செல்வர் இயேசுவின் அழைப்பை ஏற்கவில்லை, தனியாகவே வாழ விரும்புகின்றார். ஏனெனில், அவர் தனது வாழ்க்கைக் கப்பலை, தான் இருக்கும் துறைமுகத்திலிருந்து புறப்பட வைக்க விரும்பவில்லை. அவரது சங்கிலிகள் அவரை அங்கேயே துறைமுகத்திலேயே தங்க வைக்கின்றன. துறைமுகத்தில் இருப்பதால் தனியாகவே இருக்கிறார். வருத்தத்துடன் அவர் திரும்பினார் என்ற வரிகள் அவர் தன்னிலிருந்து வெளியேறத் தவறியதற்கான அறிகுறியாகக் காணப்படுகின்றது. சில நேரங்களில் செல்வங்கள் நம்மை தடுத்து நிறுத்தும் சுமைகளாக இருக்கின்றன. நம் ஒவ்வொருவரையும் போலவே இந்த செல்வரும் விரைவிலோ அல்லது பின்னரோ மனம்மாறி இயேசுவைப் பின்தொடர்ந்து எதிர்நோக்குடன் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வார்.
அன்பான சகோதரிகளே, சகோதரர்களே, வருத்தம் நிறைந்த மற்றும் முடிவெடுக்கத் துணியாத அனைத்து மக்களையும் இயேசுவின் இதயத்தில் ஒப்படைப்போம், இதனால் அவர்கள் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் கடவுளின் அன்பால் தூண்டப்பட்டு கடவுளின் பார்வையைக் கண்டுணர்வார்கள்.
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்