திருத்தந்தையின் “ஊர்பி எத் ஓர்பி" சிறப்புச்செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா மற்றும் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா என்னும் இரு முக்கிய நாள்களில், திருத்தந்தையர், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து, 'ஊருக்கும் உலகிற்கும்' எனப் பொருள்படும் ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi) என்ற சிறப்புச் செய்தி, மற்றும் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர். 13-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை பத்தாம் கிரகோரி அவர்களின் தலைமைப்பணி காலத்தில் தொடங்கப்பட்ட, “ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீர் வழங்கும் பழக்கமானது இன்று வரை நடைமுறையில் இருந்து வருகின்றது. அதன்படி மக்களுக்கு தனது ஊர்பி எத் ஓர்பி சிறப்புச் செய்தியை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தைக்கு பதிலாக திருத்தந்தையின் வழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான தலைவர் பேராயர் ஜொவான்னி தியேகோ ரவெல்லி அவர்கள் வாசித்தார்.
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா!
அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்!
இன்று நமது ஆலயங்களில் அல்லேலூயா வாழ்த்தொலி எதிரொலிக்கிறது, அது வாயிலிருந்து வரும் வார்த்தையாக மட்டுமல்லாமல் இதயத்திலும் எதிரொலிக்கிறது, மேலும் அது உலகம் முழுவதும் உள்ள இறைமக்களுக்கு ஆனந்தத்தின் கண்ணீரைக் கொண்டுவருகிறது.
எருசலேமில் உள்ள வெறுமையான கல்லறை நமக்கு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்ட இயேசு இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் கல்லறையில் இருப்பவர் அல்ல மாறாக வாழ்பவர் என்பதை எடுத்துரைக்கின்றது.
வெறுப்பை வென்றது அன்பு, இருளை வென்றது ஒளி, பொய்யை வென்றது உண்மை, பழிவாங்குதலை வென்றது மன்னிப்பு. தீமை என்பது நமது வாழ்விலிருந்து மறைந்துவிடவில்லை, அது நம் வாழ்வின் இறுதி வரை இருக்கும். ஆனால் கடவுளின் அருளை வரவேற்று ஏற்பவர்களின் வாழ்வில் அது ஒருபோதும் அதிகாரமும், ஆதிக்கமும் செலுத்தாது.
துன்பம், வலி மற்றும் வேதனையில் இருக்கும் சகோதர சகோதரிகளின் அமைதியான அழுகை கேட்கப்பட்டுள்ளது, ஒருவர் விடாது உங்கள் எல்லாரின் கண்ணீர் அனைத்தும் சேமிக்கப்பட்டுள்ளது. உலகின் தீமை அனைத்தையும் இயேசுவின் பாடுகள் மற்றும் மரணத்தின் வழியாக அவர் மீது சுமத்தினார் தந்தை கடவுள். ஆனால் இயேசு தனது எல்லையற்ற இரக்கத்தினால் அனைத்து தீமைகளையும் முறியடித்தார். மனித இதயத்தை நஞ்சாக்கி, வன்முறையையும் ஊழலையும் எங்கும் விதைக்கும் அலகையின் பெருமையை அவர் ஒழித்தார். கடவுளின் செம்மறி வெற்றி பெற்றார்! அதனால்தான் இன்று நாம், "நமது எதிர்நோக்கான கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!" என்று மகிழ்வுடன் எடுத்துரைக்கின்றோம்.
எதிர்நோக்கின் அடித்தளமாகிய இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்வானது, எதிர்நோக்கு என்பது இனி ஒரு மாயை அல்ல, சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார் என்னும் ஏமாற்றமடையாத எதிர்நோக்கினை நமக்கு எடுத்துரைக்கின்றது. இந்த எதிர்நோக்கானது தவிர்க்கப்பட வேண்டியதல்ல. மாறாக, சவாலான ஒன்று. அந்நியப்படுத்துவதில்லை, மாறாக அதிகாரம் அளிக்கிறது.
கடவுள் மேல் நம்பிக்கை கொண்டவர்கள், தங்களது பலவீனமான கரங்களை அவரது வலிமையான கரத்தில் வைப்பதன் வழியாக, தங்களையே உயர்த்தி மீண்டும் எழுந்து புறப்படவும், தங்கள் வாழ்வை வாழவும் அனுமதிக்கிறார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவுடன் சேர்ந்து அவர்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக, அன்பின் வெற்றியின் சாட்சிகளாக, ஆயுதமற்ற வாழ்வின் ஆற்றலின் சான்றுகளாக மாறுகிறார்கள்.
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்! இந்த அறிவிப்பில் நமது இருப்பின் முழு அர்த்தமும் அடங்கியுள்ளது, இது மரணத்திற்காக அல்ல, வாழ்விற்காக உருவாக்கப்பட்டது. உயிர்ப்பு என்பது வாழ்க்கையின் விழா. கடவுள் நம்மை வாழ்வதற்காகப் படைத்தார், மனிதகுலம் மீண்டும் உயர வேண்டும் என்று விரும்புகிறார்! அவரது பார்வையில் ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது! முதியவர்கள் அல்லது நோயாளிகளாக, தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளாக பல நாடுகளில் மக்கள் நிராகரிக்கப்படுகின்றனர்.
போரினாலும் வன்முறையினாலும் ஒவ்வொரு நாளும் நிகழும் பல இறப்புக்களை நாம் காண்கின்றோம். இத்தகைய வன்முறையினை நாம் நமது குடும்பங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகக் காண்கின்றோம். சில சமயங்களில் பலவீனமானவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்பையும் அவமதிப்பும் காட்டப்படுவதைக் காண்கின்றோம்.
இந்நாளில், நாம் ஒருவர் மற்றவரிடம் நம்பிக்கை கொள்வோம், நமக்கு நெருக்கமாக இல்லாதவர்களிடம் அல்லது தொலைதூர நாடுகளில் வாழ்கின்ற நமக்கு மிகவும் அறிமுகமில்லாத, வேறுபட்ட பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள், கருத்துக்கள், கொண்ட அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற நம்பிக்கையை நம்மில் வளர்த்துக்கொள்வோம்.
அமைதிக்காக செபிப்போம்
அமைதி சாத்தியமானது என்ற நம்பிக்கைக்கு நாம் திரும்புவோம். கத்தோலிக்கர்களும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் இணைந்து இந்த ஆண்டு முதல் ஒரே நாளில் கொண்டாடும் இந்த உயிர்ப்பின் பெருவிழா நாளில், புனித கல்லறை, உயிர்ப்பின் ஆலயம் முதல் புனித பூமி மற்றும் உலகம் முழுவதும் அமைதியின் ஒளி பரவட்டும். துன்புறும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரயேலில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுடன் எனது உடனிருப்பை வெளிப்படுத்துகின்றேன். பயங்கரமான மோதல்கள் தொடர் மரணம், அழிவு போன்றவற்றை உருவாக்கி, இழிவான மனிதாபிமான சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் காசா பகுதி மக்களுக்காகவும் செபிக்கின்றேன். போர் நிறுத்தம் ஏற்படவும், பிணையக் கைதிகள் விடுதலை செய்யப்படவும், பசியால் வாடுகின்ற, அமைதியான எதிர்காலத்தை விரும்புகின்ற மக்களுக்கு உதவி செய்யவும் போரில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
லெபனோன் மற்றும் சிரியாவில் உள்ள கிறிஸ்தவ சமூகங்களுக்காக செபிப்போம். அன்பான மத்திய கிழக்கின் கிறிஸ்தவர்கள், போர் காரணமாக உலகில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றை அனுபவித்து வரும் ஏமன் மக்கள் அனைவருக்காகவும் செபிப்போம்.
துன்புறும் உக்ரைன் மக்களுக்காக
உயிர்த்தெழுந்த கிறிஸ்து துன்புறுத்தப்பட்ட உக்ரைனில் உயிர்ப்பின் அமைதியைக் கொடையாகப் பொழிவாராக, தெற்கு கவுகாஸில் மிகவும் விரும்பப்படும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில், அர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே ஓர் இறுதி அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்பட்டு செயல்படுத்தப்படுவதற்காக செபிப்போம்.
உயிர்ப்பின் ஒளி மேற்கு பால்கன், காங்கோ ஜனநாயகக் குடியரசு, சூடான் தென் சூடான், சஹேல், ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) கிரேட் லேக்ஸ் ஆகிய பகுதிகளில் வன்முறை மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைதியையும் ஆறுதலையும் வழங்கட்டும். பிளவுகளை உருவாக்குகின்ற, அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளால் நிறைந்த தடைகளை உடைக்கவும், ஒருவருக்கொருவர் அக்கறை கொள்ளவும், நல்லிணக்க ஒற்றுமையை அதிகரிக்கவும், ஒவ்வொரு மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை வளர்க்கவும் உயிர்ப்பின் ஒளி நம்மைத் தூண்டுகிறது.
இந்த நேரத்தில், பல ஆண்டுகளாக ஆயுத மோதல்களாலும், நிலதிர்ச்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ள மியான்மார் மக்களுக்கு உதவ நாம் தவறக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்களின் அன்புக்குரியவர்களுக்காகவும் நாம் செபிப்போம். மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனைத்து தாராள மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களுக்கும் நன்றி கூறுவோம். நாட்டில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் மியான்மார் முழுவதற்குமான நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகின்றது.
உலகில் உள்ள அரசியல் தலைவர்கள் தேவையிலிருப்பவர்களுக்கு உதவவும், பசியை எதிர்த்துப் போராடவும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் முன்முயற்சிகளை வளர்க்கவும், கிடைக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதியின் "ஆயுதங்களாகிய” இவைகள் மரணத்தை விதைப்பதற்குப் பதிலாக, எதிர்காலத்தைக் கட்டியெழுப்புகின்றன.
பொதுமக்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் ஆகியோர் தாக்கப்படும் இலக்குகள் அல்ல, மாறாக ஆன்மா மற்றும் மனித மாண்பு கொண்ட மக்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த யூபிலி ஆண்டில், போர்க் கைதிகளையும் அரசியல் கைதிகளையும் விடுவிக்க உயிர்ப்பு ஒரு நல்ல வாய்ப்பாக அமையட்டும்!
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
கடவுளுடைய உயிர்ப்பில், மரணமும் வாழ்க்கையும் ஒன்றையொன்று எதிர்கொண்டன, கடவுள் இப்போதும் என்றென்றும் வாழ்கிறார். ஆயுதங்களின் சத்தமும் மரணத்தின் எதிரொலிகளும் இனி கேட்கப்படாத வாழ்க்கையில் பங்கேற்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்ற உறுதியை நம்மில் விதைக்கிறார். “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறிய உயிர்த்த இயேசுவில் நம்மை ஒப்படைப்போம். அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!
இவ்வாறு திருத்தந்தையின் ஊர்பி எத் ஓர்பி சிறப்புச்செய்தியை பேராயர் ஜொவான்னி தியேகோ ரவெல்லி அவர்கள் எடுத்துரைத்தார். அதன்பின் அனைவருக்கும் தனது சிறப்பு ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில் திறந்த வாகனத்தில் அமர்ந்தபடி வத்திக்கான் வளாகத்தில் உள்ள மக்கள் நடுவே வலம் வந்து இறைமக்களை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்