தூய பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தையின் உடல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மனிதராய் இம்மண்ணில் பிறந்த எல்லாருக்கும் பிறப்பும் இறப்பும் ஒரே ஒருமுறைதான் வருகின்றது. பிறப்பு, இறப்பு என்னும் இரண்டிற்கும் மத்தியில் வாழ்க்கை, பனிபோல் விரைவாய் கரைந்து விடுகின்றது. இதில் வாழும் போதே மகத்தான பண்புகளுடன் வாழ்ந்து, மாமனிதர்களாய் திகழ்பவர் சிலர். நாம் வாழ்ந்த வாழ்க்கை எப்படி அமைந்தது? பிறர் போற்ற வாழ்ந்தோமா அல்லது பிறர் தூற்ற வாழ்ந்தோமா என்று சிந்தித்துப் பார்க்கும்முன் காலம் நம்மை கொண்டு போய் விடுகின்றது. மனிதராய்ப் பிறந்து, மண்ணில் வாழும் பல மனிதர்களின் இதயத்தில் வாழ்ந்து, இன்று விண்ணகத்தந்தையின் வீட்டில் அமர்ந்திருப்பவர் நமது திருத்தந்தை பிரான்சிஸ். மாண்புடன் வாழ்ந்து, இவ்வுலகில் கடை நிலையில் இருக்கும் மனிதர் உள்பட ஒவ்வொரு மனிதரும் மாண்போடு வாழப்பட வேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியவர்.
பெயர் கொண்ட விழா
ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்னும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1936ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் நாள் அர்ஜெண்டினாவில் பிறந்தவர். ஏப்ரல் 23, புதனன்று திருஅவையானது புனித ஜார்ஜ் திருவிழாவினை சிறப்பிக்கும் வேளையில், புனிதர் ஜார்ஜின் பெயரை தனது இயற்பெயராகக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பெயர் கொண்ட விழாவினை இவ்வாண்டு விண்ணகத்தில் சிறப்பிக்கின்றார். பெயர்கொண்ட விழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலானது திருத்தூதர் தூய பேதுரு பெருங்கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஏப்ரல் 23, புதன்கிழமை காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலானது சிறப்பு செபவழிபாட்டுடன் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலிற்குள் பவனியாக எடுத்து வரப்பட்டது. உரோம் உள்ளூர் நேரம் காலை 9 மணியளவில், சாந்தா மார்த்தா இல்லத்தின் ஆலயத்திலிருந்து எடுத்து வரப்பட்ட திருத்தந்தையின் உடலானது, சாந்தா மார்த்தா வளாகம் வழியாக பவனியாக கொண்டு வரப்பட்டு, தூய பேதுரு பெருங்கோவிலின் முன்புற நுழைவாயில் வழியாக ஆலயத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டது. கர்தினால் Kevin Joseph Farrell அவர்கள் தலைமையில் இந்த வழிபாட்டு முறையானது இலத்தீன் மொழியில் நடைபெற்றது. சாந்தா மார்த்தா ஆலயத்திலிருந்து பவனி ஆரம்பமாகும் முன், திருத்தந்தையின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற சிறிய செபம் ஒன்றினை எடுத்துரைத்தார் கர்தினால் ஃபரேல்
“சாந்தா மார்த்தாஇல்லத்திலிருந்து வெளியேறும் முன், கடவுளின் ஊழியரான திருத்தந்தை பிரான்சிஸ் வழியாகக் கடவுள் கிறிஸ்தவ மக்களுக்கு வழங்கிய எண்ணற்றக் கொடைகளுக்காக அவருக்கு நாம் நன்றி கூறுவோம். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு விண்ணகத்தந்தை தனது வான்வீட்டில் ஓர் இடத்தை வழங்க இறைவனது இரக்கத்தையும் தயவையும் நாடுவோம். அவரது பிரிவால் வருந்தும் திருஅவைக் குடும்பம், உரோம் தலத்திருஅவை, இறைமக்கள் அனைவருக்கும் இறைவனின் ஆறுதல் கிடைக்கப்பெற செபிப்போம்” என்று கர்தினால் ஃபரேல் அவர்கள் செபித்தார். அதன்பின் கர்தினால் அவர்கள் திருத்தந்தையின் உடலினை புனித நீர் மற்றும் தூபம் கொண்டு ஆசீர்வதித்ததும் பவனியானது ஆரம்பமானது.
தூய பேதுரு பெருங்கோவில் நோக்கிய பவனி
மெழுகுதிரிகள் ஏந்திய பீடப்பணியாளர்கள் மற்றும் அருள்பணியாளர்களுடன் ஆரம்பமான இப்பவனியில் ஆயர்கள் மற்றும் கர்தினால்களைத் தொடரந்து திருத்தந்தையின் உடல் தாங்கிய பெட்டியை உதவியாளர்கள் சுமந்து வந்தனர். அவர்களைச் சுற்றி சுவிஸ் காவலர்களும் மெழுகுதிரி ஏந்திய வத்திக்கான் பணியாளர்களும் திருத்தந்தையின் உடலைத் தாங்கியிருந்த பெட்டியைச் சுற்றி உடன் நடந்து வந்து மரியாதை செலுத்தினர்.
பவனியின் போது, ஆண்டவரே என் ஆயர் என்ற திருப்பாடல் எண் 23, ஆண்டவரே உண்மையான கடவுள் என்பதை வலியுறுத்தும் திருப்பாடல்கள் 115 மற்றும் 116, பாவ மன்னிப்புக்காக மன்றாடும் திருப்பாடல் எண் 50, நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர், உதவிக்காக, இரக்கத்திற்காக மன்றாடும் திருப்பாடல் எண்கள் 120, 122, 131 போன்றவை பாடலாக இலத்தீன் மொழியில் பாடப்பட்டன.
பெருங்கோவிலின் மணிகள் இடைவிடாது ஒலியெழுப்ப, சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்பட்ட பவனியானது, வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலின் வளாகத்தை வந்தடைந்ததும் வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 20,000 மக்கள் இடைவிடாது கரவொலி எழுப்பி திருத்தந்தையின் உடலை வரவேற்றனர். கடந்த ஏப்ரல் 20, உயிர்ப்பு ஞாயிறன்று இறுதியாகத் தனது மந்தையைச் சார்ந்த மக்களைச் சந்தித்து, உயிர்ப்பு வாழ்த்துக்களை எடுத்துரைத்த மேய்ப்பர், இன்று உயிரற்ற உடலாக வத்திக்கான் வளாகத்தை வந்தடைந்ததும் மக்கள் துயரத்தால் வருந்தினர். திருத்தந்தையின் உடலிற்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் நீண்ட நேரம் கரவொலி எழுப்பினர். வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலிற்குள் திருத்தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு பீடத்திற்கு முன் வைக்கப்பட்டது. புனிதர்கள் மன்றாட்டு மாலையானது இலத்தீன் மொழியில் பாடப்பட்டு புனிதர்களின் துணை நாடப்பட்டு செபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலை புனித நீர் கொண்டும் தூபம் கொண்டும் அர்ச்சித்தார் கர்தினால் Farrell
அதன்பின் யோவான் நற்செய்தியிலிருந்து (17:24-26) இறைத்தந்தையுடன் இணைந்திருப்பது பற்றி இயேசு எடுத்துரைத்த இறைவார்த்தைகள், இலத்தீன் மொழியில் அருள்பணியாளர் ஒருவரால் வாசிக்கப்பட்டன. மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவை, அனைத்து நாடுகளில் வாழும் மக்கள், பெருங்கோவிலில் கூடியிருந்த மக்கள் என அனைவருக்காகவும் மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன. இறுதியாக விண்ணகத் தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் திருத்தந்தையின் ஆன்மா இறைவனில் இளைப்பாறுதல் அடைய செபமானது செபிக்கப்பட்டு, இச்செபவழிபாடானது நிறைவிற்கு வந்தது. செப வழிபாட்டிற்குப் பின் திருத்தந்தையின் உடலாலானது பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திருத்தந்தையின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் (உரோம்) நேரம்
ஏப்ரல் 23, புதன்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 11 மணி (இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.30 மணி) முதல் நள்ளிரவு 12 மணி வரையும், ஏப்ரல் 24, வியாழன் காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும், ஏப்ரல் 25, வெள்ளி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையும் பொதுமக்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் இரவு 8 மணியளவில் இந்திய இலங்கை நேரம் இரவு 11.30 மணியளவில் கர்தினால் Kevin Joseph Farrell அவர்கள் தலைமையில் தனிப்பட்ட அளவில் நடைபெறும் சிறு செபவழிபாட்டுடன் திருத்தந்தையின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியானது மூடப்பட உள்ளது.
ஏப்ரல் 26 சனிக்கிழமை காலை 10 மணிக்கு இந்திய இலங்கை நேரம் பிற்பகல்1.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச்சடங்குத் திருப்பலியானது நடைபெற உள்ளது. இத்திருப்பலிக்கு கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் தலைமை தாங்க உள்ளார். திருப்பலியின் நிறைவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலானது உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.
திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபமாலை வழிபாடு
0ஏப்ரல் 21, திங்களன்று மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இரண்டாவது நாளாக வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மாலை 7.30 மணிக்கும் மேரி மேஜர் பெருங்கோவில் வளாகத்தில் இரவு 9.00 மணிக்கும் செபமாலை வழிபாடானது நடைபெற்றது. ஏராளமான மக்கள் இச்செப வழிபாட்டில் கலந்துகொண்டனர். மேரி மேஜர் பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற செபமாலை வழிபாட்டிற்குத் தலைமை தாங்கிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், “திருத்தூதர் பவுல் நமக்கு நினைவுறுத்துவது போல விண்ணகத்தை நோக்கி நமது பார்வையை உயர்த்தி கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் இயேசுவைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம். எனவே இந்த செபமாலை நேரத்தில் உரோம் நகரின் பாதுகாவலியான அன்னை மரியாவிடம் திருத்தந்தையின் ஆன்மாவை ஒப்படைத்து செபிப்போம்” என்று கூறினார். செபமாலையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது துன்பங்கள் அனைத்தையும் உலக அமைதிக்காகவும் மக்களிடையே உடன்பிறந்த உணர்வு மேம்படவும் அர்ப்பணித்தார் என்பதை நினைவுகூர்ந்து கூடியிருந்த மக்களுக்கு ஆசீர் வழங்கினார் கர்தினால் பரோலின்.
வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற செபமாலை வழிபாட்டிற்குத் தலைமை தாங்கிய கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள், “எனக்காக செபிக்க மறவாதீர்கள் என்று அடிக்கடி வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் குரல் நம் இதயங்களில் நிறைந்துள்ளது. ஏமாற்றம் தராத எதிர்நோக்கின் திருப்பயணியாக திருத்தந்தை திகழ்கின்றார், அவரது ஆன்மா இளைப்பாற்றிக்காக செபமாலை செபிப்போம்” என்று கூறி செபவழிபாட்டினை ஆரம்பித்தார்.
ஆயிரக்கணக்கான மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்து திருத்தந்தைக்காக செபித்தனர். "தனது வாழ்நாள் எல்லாம் இறைத்தந்தையின் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழியாகத் திருஅவை பெற்றுக்கொண்ட ஏராளமான கொடைகளுக்காக நன்றி கூறுவோம்" என்று செப மாலை வழிபாட்டின் இறுதியில் கூறி ஆசீர் வழங்கினார் கர்தினால் ரே.
உரோம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாறுதலுக்காக செபித்து வருகின்றனர். நாமும் தொடர்ந்து அவருக்காக செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்