புனிதக் கதவின் வழியாகச் செல்வது நம் அனைவரையும் நம்பிக்கையில் புதுப்பிக்கும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"புனிதக் கதவின் வழியாகச் செல்வது நம் அனைவரையும் நம்பிக்கையில் புதுப்பிக்கட்டும்” என்றும், “இதனால் நாம் மேய்ப்பராகவும், மந்தையாகவும் ஒன்றிணைந்து பயணிக்க முடியும்" என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 9, புதன்கிழமை இன்று, யூபிலி ஆண்டை முன்னிட்டு இத்தாலியிலுள்ள Grosseto மற்றும் Pitigliano-Sovana-Orbetello மறைமாவட்டங்களிலிருந்து வத்திக்கான் நகருக்குத் திருப்பயணிகளாக வந்துள்ள விசுவாசிகளுக்கு வழங்கியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
"உங்களில் நோயுற்றவர்களையும் முதியவர்களையும் நான் குறிப்பாக என் எண்ணங்களில் நினைவில் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஆறுதல் மற்றும் மீட்பின் தோற்றுவாயாக விளங்கும் திருச்சிலுவையில், ஆண்டவராகிய இயேசுவைத் தியானித்து, இந்தச் சோதனைக் காலத்தை வாழ்வோம்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
"உலகில் நாம் காணும், மற்றும் நம் இதயங்களில் உணரும் சிரமங்களை எதிர்கொண்டு, உலகின் உப்பாக நம்மை மாற்றும் அந்த நம்பிக்கைக்கு ஒவ்வொரு நாளும் சான்று பகர்ந்து, இறைவேண்டலில் விடாமுயற்சியுடன் இருக்குமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன்" என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்