MAP

வத்திக்கானில் புனித பேதுரு பெருங்கோவில் நோக்கி யூபிலி ஆண்டுத் திருப்பயணம் வத்திக்கானில் புனித பேதுரு பெருங்கோவில் நோக்கி யூபிலி ஆண்டுத் திருப்பயணம்   (ANSA)

திருஅவை என்பது ஒரு புதிய மற்றும் ஒப்புரவாக்கப்பட்ட மனிதகுலம்!

“மற்றவர்களுடன், குறிப்பாக உங்கள் பங்குத்தளச் சமூகங்களுடன் ஒத்துழைக்க எப்போதும் தயாராக இருங்கள், அப்போது ஆண்டவராம் இயேசு அளவிடமுடியாத அருள்கொடைகளுடன் உங்களை ஆசீர்வதிப்பார்” : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“துடிக்கும் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்துவது போல, நீங்கள் திருஅவைக்கு மட்டுமல்ல, அதன் உலகளாவிய பரிமாணங்களுக்கும் உங்களை அர்ப்பணிக்க விரும்புகிறீர்கள்” என்றும், “திருத்தந்தையின் நோக்கங்களை, குறிப்பாக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நோக்கங்களை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 3, வியாழக்கிழமை இன்று, கத்தோலிக்க அருங்கொடைசார் புதுப்பித்தல் அனைத்துலக சேவை அமைப்பின் யூபிலி ஆண்டுத் திருப்பயணத்தின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

“உயிர்த்தெழுந்த இயேசு ஆண்டவரின் கொடையான தூய ஆவியார், ஒன்றிப்பு, நல்லிணக்கம் மற்றும் உடன்பிறந்த உறவின் தோற்றுவாயாக (source) இருக்கிறார்” என்றும், “திருஅவை என்பது ஒரு புதிய மற்றும் ஒப்புரவாக்கப்பட்ட மனிதகுலம்” என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“இந்த அனுபவம் உங்களுக்கானது மட்டுமன்று, மாறாக, எல்லாருக்குமானது” என்று மொழிந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “நம்பிக்கை மற்றும் அமைதிக்கான ஆதாரமாக அமைந்துள்ள இந்த அனுபவத்தை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றும் தனது செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நமது குடும்பங்களிலும், சமூகத்திலும், நாடுகளுக்கு மத்தியிலும் ஏற்படும் மோதல்களைக் கடப்பதற்குத் தேவையான உண்மையான அமைதியை தூய ஆவியார் மனித இதயங்களுக்கு வழங்க முடியும்” என்றும் அவர்களுக்கு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

“உங்கள் குழுக்கள் மற்றும் சமூகங்களில் தொடங்கி, எப்போதும் ஒன்றிப்பைக் கட்டியெழுப்ப பாடுபட்டு, அமைதி மற்றும் ஒற்றுமையின் சாட்சிகளாகவும் கைவினைஞர்களாகவும் இருக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

“மற்றவர்களுடன், குறிப்பாக, உங்கள் பங்குத்தளச் சமூகங்களுடன் ஒத்துழைக்க எப்போதும் தயாராக இருங்கள், அப்போது ஆண்டவராம் இயேசு அளவிட முடியாத அருள்கொடைகளுடன் உங்களை ஆசீர்வதிப்பார்” என்று கூறி தனது செய்தியை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஏப்ரல் 2025, 12:50