உரோமின் இலாத்ரன் பல்கலைக்கழகத்திற்கு உதவ திருத்தந்தை கோரிக்கை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருஅவை முழுமைக்கும் பலன்தரும் நோக்கத்தில் நூற்றாண்டுகளாகக் கல்வியையும் ஆய்வுகளையும் ஏற்று நடத்தி வழங்கிவரும் உரோமை பாப்பிறை கல்விக் கழகங்களின் பணிகளைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் பாப்பிறை இலாத்ரன் பல்கலைக்கழகத்திற்கு உலக ஆயர்கள் முன்வந்து உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள திருப்பீடத் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் வழி உலக ஆயர்களுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ள திருத்தந்தை, உலகின் மறைமாவட்டங்களும் துறவுசபைகளும், பொதுநிலை அமைப்புக்களும் தங்கள் மாணவர்களை உரோம் நகரின் பாப்பிறை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பும்போது, இலாத்ரன் பல்கலைக்கழகத்தைக் குறித்து சிறப்பு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.
திருத்தந்தையுடன் சிறப்பான விதத்தில் இணைப்பைக் கொண்டிருக்கும் உரோம் நகரின் இலாத்ரன் பாப்பிறைப் பல்கலைக்கழகம் கடந்த 250 ஆண்டுகளாக கல்விப் பணியை ஆற்றி வருவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பல்கலைக்கழகம் உரோம் ஆயரின் பல்கலைக்கழகம் என்ற சிறப்புப் பெயரைக் கொண்டுள்ளதையும் நினைவூட்டினார்.
மாணவர்களை அனுப்பி உதவ முடியாத வேளையில் மறைமாவட்டங்களும், துறவு சபைகளும், ஏனைய அமைப்புகளும் இப்பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள், மாணவர் உதவித் தொகைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் வழி உதவ வேண்டும் எனவும் திருத்தந்தையின் கடிதம் அழைப்பு விடுக்கிறது.
உரோம் நகரின் இலாத்ரன் பல்கலைக்கழகம் ஏப்ரல் 10ஆம் தேதி ஒருங்கிணைந்த நடைபோடலின் நாளையும், ஏப்ரல் 28ஆம் தேதி நீசேயா பொதுச்சங்கத்தின் 1700ஆம் ஆண்டு கொண்டாட்ட நாளையும், மே மாதம் 6ஆம் தேதி Helsinki ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையும் பல்வேறு நிகழ்ச்சிகள் வழி சிறப்பிக்க உள்ளது.
2023-2024 கல்வியாண்டில் உரோம் நகரின் இலாத்ரன் பல்கலைக்கழகம் 1137 மாணவர்களையும் 139 பேராசிரியர்களையும் கொண்டிருந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்