MAP

கடந்த ஞாயிறன்று மக்களைச் சந்தித்த திருத்தந்தை கடந்த ஞாயிறன்று மக்களைச் சந்தித்த திருத்தந்தை  

திருத்தந்தை தொடர்ந்து படிப்படியாக நலமடைந்து வருகிறார்!

புனித வாரத் திருவழிபாட்டு நிகழ்வுகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. மேலும் அவரது உடல்நிலை குறித்த மற்றொரு அறிக்கை ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமையன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மூச்சுக்குழல் அழற்சி நோய் மற்றும் மார்சளிக் காய்ச்சல் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி முதல் உரோமை ஜெமெல்லி மருத்துவமனையில் 38 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 23, ஞாயிறன்று, தனது இல்லம் திரும்பிய பிறகு தொடர்ந்து படிப்படியாக நலமடைந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

ஏப்ரல் 8, இச்செவ்வாய் நண்பகல் வழங்கிய அறிக்கையொன்றில் இத்தகவலை வழங்கியுள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பகம், திருத்தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், சுவாசம், இயக்கம் மற்றும் குரல் தொடர்பான நலமடைதலில் தொடர்ந்து படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது அலுவலகப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் எனக் கூறும் அதன் அறிக்கை, ஆவணங்களைப் பெறுதல், தொலைபேசி அழைப்புகள் செய்தல், நாள்தோறும் திருப்பலியில் பங்கேற்றல், காசாவில் உள்ள திருக்குடும்ப பங்குத்தளத்துடன் தொடர்பைப் பேணுதல் ஆகியவற்றையும் மேற்கொண்டுள்ளார் என்றும் உரைக்கிறது.

ஏப்ரல் 9-ஆம் தேதி திட்டமிடப்பட்ட திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இருப்பினும் தயாரிக்கப்பட்ட எழுத்துப்படிவ உரை பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித வாரத் திருவழிபாட்டு நிகழ்வுகளில் திருத்தந்தை பங்கேற்பது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்றும், அவரது உடல்நிலை குறித்த மற்றொரு அறிக்கை ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமையன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஏப்ரல் 2025, 12:06