திருத்தந்தையர்களின் கல்லறைகள் விவரம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
தான் இறந்த பிறகு, தனது உடல் எங்கே, எவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதியன்று தனது விருப்பதைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதி விருப்பத்தையொட்டி, உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் இச்சனிக்கிழமையன்று, அதாவது ஏப்ரல் 26ஆம் தேதியன்று அடக்கம் செய்யப்பட உள்ளார் அவர்.
"என் வாழ்நாள் முழுவதும், ஓர் அருள்பணியாளராகவும், ஆயராகவும் எனது ஊழியத்தின் போது, நான் எப்போதும் என்னை நம் ஆண்டவரின் அன்னையாம் தூய கன்னி மரியாவிடம் ஒப்படைத்து அவரில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வந்துள்ளேன். இந்தக் காரணத்திற்காக, நான் உயிர்த்தெழும் அந்த நாளுக்காக எனது உடல் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என வேண்டுகிறேன்" என்று தன் கடைசி விருப்ப பத்திரத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையும் மேரி மேஜரும்
தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாள் காலையிலேயே, அதாவது 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதியே புனித மேரி மேஜர் பேராலயத்திற்கு பயணம் செய்து அன்னை மரியா திரு உருவத்தின் முன் செபித்து தன் பணிகளைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதுபோல் “எனது மண்ணக வாழ்வின் இறுதிப் பயணம் பழம்பெருமை வாய்ந்த இந்த மரியன்னை பெருங்கோவிலில் முடிவடைய வேண்டுமென நான் விரும்புகின்றேன்” என்றும் மொழிந்துள்ள திருத்தந்தை, “எனது ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் இறைவேண்டல் செய்ய நான் இங்கே வருகிறேன்” என்றும், “நம்பிக்கையுடன் எனது உள்ளத்தின் நோக்கங்களை தூய்மைமிகு அன்னை மரியாவிடம் ஒப்படைத்து அவருடைய இளகிய மற்றும் தாய்வழி கவனிப்புக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றும் உருக்கமாக அதில் கூறியுள்ளார்.
வெளிநாடுகளுக்கு திருத்தூதுப் பயணங்களைத் தொடங்குவதற்கு முன்னும், அவற்றை நிறைவுச் செய்து திரும்பும் வேளையிலும், உரோம் மேரி மேஜர் பசிலிக்காவிலுள்ள Salus Populi Romani அன்னை மரியாவிடம் சென்று, மலர்களை அர்ப்பணித்து செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உடல் சுகவீனமுற்று 38 நாட்கள் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று திரும்பும் வழியிலும், நேரடியாக வத்திக்கானுக்கு வராமல், புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று, வாசலில் அங்குள்ள தலைமைக்குருவைச் சந்தித்து தன் சார்பாக அன்னைமரியா திருவுருவத்திற்கு மலர்க்கொத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டு மலர்க்கொத்தையும் வழங்கினார். பின்னர், உடல் நலமுற்றிருந்த நிலையிலும், ஏப்ரல் 12ஆம் தேதியன்று சனிக்கிழமை, அதாவது புனித வாரத்தின் முதல் நாளாகிய குருத்து ஞாயிறுக்கு முந்தைய நாள் வத்திக்கானுக்கு ஏறக்குறைய 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேரி மேஜர் பெருங்கோவில் வந்து சக்கர நாற்காலியில் அன்னை மரியா திருவுருவம் முன், அதாவது Salus Populi Romani திருவுருவம் முன் சிறிது நேரம் செபித்தார். தனது தலைமைத்துவப் பணியின் பன்னிரண்டு ஆண்டுகளில் 126ஆவது முறையாக ஏப்ரல் 12 சனிக்கிழமை உரோம் புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன் பதவிக்காலத்தின்போது, புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள அன்னை மரியா திரு உருவத்திற்கு 2023ஆம் ஆண்டு தங்க ரோஜா ஒன்றையும் பரிசளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 1551ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் ஜூலியஸ் அவர்களாலும், 1613ல் திருத்தந்தை 5ஆம் பவுல் அவர்களாலும் தங்க ரோஜாக்கள் Salus Populi Romani, அதாவது, உரோம் மக்களின் பாதுகாவலரான அன்னை மரியாவின் திருவுருவத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2023ஆம் ஆண்டு இத்திருவுருவத்திற்கு தங்க ரோஜா ஒன்றை பரிசளித்தார்.
முன்னர் காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க ரோஜாக்கள், நெப்போலியனின் படைகள் திருத்தந்தையின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இடங்களை முற்றுகையிட்டபோது காணாமல் போயுள்ள நிலையில், தற்போது தங்க ரோஜாவை அன்னை மரியின் திருவுருவத்திற்கு காணிக்கையாக வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"Salus Populi Romani" திருஉருவப்படம்
அன்னை மரியாவின் இந்த "Salus Populi Romani" திருஉருவப்படம் உரோம் மக்களால் இவ்வளவு உயர்வாக வைக்கப்பட்டு வணங்கப்படுவது குறித்து நீங்கள் அறிய விரும்பலாம்.
590ஆம் ஆண்டு, உரோம் நகரில் கொள்ளை நோய் பரவியிருந்த வேளையில், திருத்தந்தை பெரிய கிரகரி அவர்கள், "Salus Populi Romani" என்ற இந்த திருஉருவப்படத்தை நகரெங்கும் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். அன்று முதல் இந்த உருவப்படம், 'உரோம் நகரின் மீட்பாக' விளங்குகிறது.
கோவிட் பெருந்தொற்று, இத்தாலியையும் உலகையும் வெகுவாக வதைத்துவந்த 2020ஆம் ஆண்டில், மார்ச் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள "Salus Populi Romani" திருஉருவத்திற்கு முன்னும், San Marcello ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள, அறையப்பட்ட கிறிஸ்துவின் சிலுவைக்கு முன்னும் செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவண்ணம், 2020 மார்ச் 27ஆம் தேதி, ஆள் நடமாட்டம் ஏதுமற்ற புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், கோவிட் பெருந்தொற்று தீரவேண்டுமென திருத்தந்தை மேற்கொண்ட சிறப்பு Urbi et Orbi வழிபாட்டில், "Salus Populi Romani" திருஉருவப்படமும், அறையப்பட்ட கிறிஸ்துவின் சிலுவையும் வைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கன.
இயேசு சபையும் அன்னை மரியா திருவுருவமும்
இந்த திரு உருவப்படத்திற்கும் இயேசு சபையினருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதும் நாம் அறியவேண்டிய ஒன்று. இந்த திரு உருவப்படத்தினை பிரதிகள் எடுக்கக்கூடாது என்ற தடை இருந்தாலும், இயேசு சபையினரின் மூன்றாவது உலகத் தலைவர் புனித பிரான்சிஸ் போர்ஜியா அவர்கள், திருத்தந்தை 5ஆம் பயஸ் அவர்களிடம், 1569ஆம் ஆண்டு, ஒரு சிறப்பு அனுமதி பெற்று, அன்னையின் இந்த உருவப்படத்தின் பிரதிகளைச் செய்து, அவற்றை இயேசு சபையினர் பணியாற்றும் நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வழி செய்தார். இயேசு சபையைச் சேர்ந்த நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இந்த "Salus Populi Romani" திருவுருவப்படம் மிகவும் தெரிந்த ஒன்றுதான். அவ்வன்னையின் மீது திருத்தந்தை மிகுந்த பற்றுடையவராக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களைப் போன்று அன்னை மரியாவின் பாதுகாப்பில் தன்னை முழுமையாக ஒப்படைத்த திருத்தந்தை, தான் விரும்பிச் சென்று செபிக்கும் பெருங்கோவிலில், தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்பியதில் வியப்பேதுமில்லை. "Salus Populi Romani", அதாவது, "உரோம் மக்களின் மீட்பு" என்ற பெயருடன் அமைந்துள்ள அன்னை மரியாவின் திருஉருவப் படத்தைத் தாங்கியிருக்கும் மேரி மேஜர் பெருங்கோவிலுக்கு உள்ளேயுள்ள சிற்றலயத்திற்கு அருகில் திருத்தந்தையின் கல்லறை அமைய உள்ளது.
திருத்தந்தையர் கல்லறைகள்
1903ஆம் ஆண்டிற்குப்பின் வத்திக்கானுக்கு வெளியே உரோம் நகரில் அடக்கம் செய்யப்படும் முதல் திருத்தந்தை நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்தான். 1903ஆம் ஆண்டில் இறந்த திருத்தந்தை 13ஆம் லியோ அவர்களும், தான் உரோம் நகரின் புனித ஜான் இலாத்ரன் பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்படவேண்டும் என விரும்பியிருந்தார், அங்குதான் அவரின் கல்லறை உள்ளது.
தற்போது நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அங்கு ஏற்கனவே 7 திருத்தந்தையர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 13ஆம் நூற்றாண்டில் இறந்த திருத்தந்தை மூன்றாம் ஹொனாரியுஸ், அதே நூற்றாண்டில் இறந்த திருத்தந்தை நான்காம் நிக்கோலஸ், பதினாறாம் நூற்றாண்டில் இறந்த திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ், அதே நூற்றாண்டில் இறந்த திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ், 17ஆம் நூற்றாண்டில் இறந்த திருத்தந்தை ஐந்தாம் பவுல், அதே நூற்றாண்டின் துவக்கத்தில் இறந்த திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட், அதே நூற்றாண்டில் உயிரிழந்த திருத்தந்தை ஒன்பதாம் கிளமெண்ட் ஆகியோரின் கல்லறைகள் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ளன.
புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்படும் பழக்கம் 4ஆம் நூற்றாண்டில்தான் துவங்கியது. புனித பேதுரு பெருங்கோவிலிலும், அதன் அடிநிலக்கல்லறையிலும் 90 திருத்தந்தையர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். 265 திருத்தந்தையருள் 140க்கும் மேற்பட்டோர் புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டனர் என கூறுவோரும் உண்டு.
நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். திருஅவையின் இவ்வுலகத் தலைவராக இருக்கும் திருத்தந்தை, உரோம் மறைமாவட்டத்தின் ஆயரும் ஆவார். வத்திக்கானில் திருத்தந்தை வாழ்ந்து வந்தாலும், உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் புனித ஜான் இலாத்ரன் பெருங்கோவிலே அவரின் மறைமாவட்ட பேராலயமாகும். கடைசியாக 1903ஆம் ஆண்டு வத்திக்கானுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட திருத்தந்தை 13ஆம் லியோ உட்பட 22 திருத்தந்தையர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புனித பவுல் பெருங்கோவிலில் இரு திருத்தந்தையர்களின் கல்லறைகள் உள்ளன. உரோம் நகரில் உள்ள புனித இலாரன்ஸ் பேராலயத்தில், 1878ஆம் ஆண்டு இறந்த திருத்தந்தை ஒன்பதாம் பயஸுடன், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேறு நான்கு திருத்தந்தையர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, ஐந்து திருத்தந்தையரின் கல்லறைகள் உரோம் நகரின் சாந்தா மரியா சோப்ரா மினர்வா பேராலயத்தில் உள்ளன. திருத்தந்தை 14ஆம் கிளமெண்டின் கல்லறை உரோமின் 12 திருத்தூதர் என்ற பேராலயத்தில் உள்ளது.
திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்டுக்கு முன்னர், கடைசியாக பதவியை துறந்த திருத்தந்தை 12ஆம் கிரகரியின் கல்லறை இத்தாலியின் மச்செராத்தா மாவட்டத்தில் உள்ள ரெக்காந்தி பேராலயத்தில் உள்ளது. தன் பதவியை துறந்தபின் 1294ல் உயிரிழந்த திருத்தந்தை புனித ஐந்தாம் செலஸ்தினின் கல்லறை இத்தாலியின் லாக்குயிலாவின் கொல்லோமாஜியோவின் பேராலயத்தில் உள்ளது. பத்தாம் கிரகரியின் கல்லறை அரெட்சோவிலும், புனித ஏழாம் கிரகரியின் கல்லறை சலெர்னோவிலும், புனித முதலாம் அதெயோதாத்துஸ் அவர்களின் கல்லறை சிந்தோ எயுகானெயோவிலும் என இத்தாலி நாட்டிற்குள் உள்ளன.
திருத்தந்தையர்கள் 12ஆம் பெனடிக்ட் மற்றும் 22ஆம் ஜானின் கல்லறைகள் பிரான்சின் அவிஞ்ஞோன் நகரில் உள்ளன. திருத்தந்தை ஐந்தாம் உர்பானின் கல்லறை பிரான்சின் மர்சேல்ஸ் நகரின் புனித விக்டர் துறவு இல்ல கோவிலில் உள்ளது. இது தவிர, மூன்றாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டமாக இருந்த உரோம் நகரின் புனித கலிஸ்துஸ் அடிநிலக் கல்லறையில், ஏறக்குறைய 5 இலட்சம் ஆதிகால கிறிஸ்தவர்களுடன் 16 திருத்தந்தையர்களும் புதைக்கப்பட்டுள்ளனர் என வரலாறு உரைக்கிறது.
மேரி மேஜர் பெருங்கோவில்
தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடக்கம் செய்யப்பட உள்ள மேரி மேஜர் பெருங்கோவில் மரியன்னையின் திருத்தலங்களுக்கு தாய்வீடு. புனித மேரி மேஜர் பெருங்கோவில், மேற்கத்திய நாடுகளில், அன்னை மரியாவுக்கென எழுப்பப்பட்ட முதல் பெருங்கோவில் என்பதால், இது, கிறிஸ்தவ உலகில் உள்ள மரியன்னையின் திருத்தலங்கள் அனைத்திற்கும் தாய்வீடாக உள்ளது. இப்பெருங்கோவிலின் வரலாறு, திருஅவையின் ஆரம்பக் காலத்துடன் பின்னிப் பிணைந்தது. இறைவன் மனிதரிடையே தன் உறைவிடத்தை அமைத்தார் என்பதற்கு இந்த பெருங்கோவில் ஓர் அடையாளமாக உள்ளது. உரோம் மக்களுக்கு நலம் வழங்கும் அன்னை என்ற பொருள்கொண்ட 'Salus Populi Romani' என்ற பெயர் தாங்கிய அன்னை மரியாவின் திருப்படம் இப்பெருங்கோவிலில் உள்ள ஒரு கருவூலம்.
கானா திருமண விருந்தில் தேவை ஒன்று உருவானதும், அங்கு பிரசன்னமான அன்னை மரியா, பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்று கூறியதை நாம் வாழ்வில் ஒருபோதும் மறக்கவேண்டாம். அந்த வார்த்தைகளை மொழிந்த அன்னை மரியாவை இறுக்கமாக பற்றிக்கொண்டு, இயேசுவின் கட்டளைகளை மரியாவின் உதவியோடு நிறைவேற்றி வந்த நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழியில் நாமும் நடைபோட முயல்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்