தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தீவிர மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக உரோமை ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தனக்கு சிகிச்சையளித்த ஏறத்தாழ 70 மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளை வத்திக்கானுக்கு அழைத்து நன்றி தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 16, புதன்கிழமை இன்று காலை, திருப்பீடத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, அவர்கள் அனைவருக்காகவும் செபிப்பதாக உறுதியளித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி முதல் உரோமை ஜெமெல்லி மருத்துவமனையில் 38 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 23, ஞாயிறன்று, தனது இல்லம் திரும்பிய பிறகு அவரது சுவாசம் மற்றும் இயக்கம் தொடர்பான நிலைகளில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
மேலும் மாலை வேளைகளில் மட்டும், அதுவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் நேரங்களில் மட்டும் திருத்தந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாகவும், அத்துடன், அவருக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சிகிச்சை முறைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து தனது அலுவலகப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், திருஅவையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் உரைக்கிறது அதன் அறிக்கை. .
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்