திருத்தந்தையின் நல்லடக்கம் குறித்த இறுதி விருப்ப ஆவணம் வெளியீடு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தான் இறந்த பிறகு, தனது உடல் எங்கே எவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதியன்று தனது விருப்பதைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதி விருப்ப ஆவணத்தை (spiritual testament) வெளியிட்டுள்ளது வத்திக்கான்.
"மூவொரு கடவுளின் பெயரால்-ஆமென்" என்று தனது இறுதி விருப்ப ஆவணத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "இம்மண்ணக வாழ்வுக்குரிய எனது இறுதிநேரம் நெருங்கி வருவதை நான் உணரும் வேளை, நிலைவாழ்வில் உறுதியான நம்பிக்கை கொண்டவனாக, என் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடம் குறித்து மட்டுமே எனது இறுதி விருப்பங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
"என் வாழ்நாள் முழுவதும், ஓர் அருள்பணியாளராகவும், ஆயராகவும் எனது ஊழியத்தின் போது, நான் எப்போதும் என்னை நம் ஆண்டவரின் அன்னையாம் தூய கன்னி மரியாவிடம் ஒப்படைத்து அவரில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வந்துள்ளேன்" என்றும், "இந்தக் காரணத்திற்காக, நான் உயிர்த்தெழும் அந்த நாளுக்காக எனது உடல் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் வேண்டுகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
“எனது மண்ணக வாழ்வின் இறுதிப் பயணம் பழம்பெருமை வாய்ந்த இந்த மரியன்னை பெருங்கோவிலில் முடிவடைய வேண்டுமென நான் விரும்புகின்றேன்” என்று மொழிந்துள்ள திருத்தந்தை, “எனது ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் இறைவேண்டல் செய்ய நான் இங்கே வருகிறேன்” என்றும், “நம்பிக்கையுடன் எனது உள்ளத்தின் நோக்கங்களை தூய்மைமிகு அன்னை மரியாவிடம் ஒப்படைத்து அவருடைய இளகிய மற்றும் தாய்வழி கவனிப்புக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றும் உருக்கமாகக் கூறியுள்ளார்.
"இங்கே இணைக்கப்பட்ட திட்டத்தில் காட்டப்பட்டுள்ளபடி, பவுல் கோவில் (Chapel of the Salus Populi Romani) மற்றும் பெருங்கோவிலின் ஸ்ஃபோர்ஸா கோவிலுக்கு இடையே உள்ள பக்கவாட்டு இடைகழியில் உள்ள அடக்கம் செய்யும் இடத்தில் எனது கல்லறையைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றும் உரைத்துள்ளார்.
"எனது கல்லறை தரையில்தான் இருக்க வேண்டும் என்றும், அது குறிப்பிட்ட அலங்காரம் எதுவுமின்றி எளிமையாக இருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, "எனது கல்லறை பிரான்சிஸ்குஸ் (Franciscus) என்ற கல்வெட்டை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும்" என்றும் விண்ணப்பித்துள்ளார்.
"எனது உடலை நல்லடக்கம் செய்வதற்கான செலவு ஒரு நன்கொடையாளரால் வழங்கப்படும் தொகையால் ஈடுசெய்யப்படும்" என்றும், "அதை நான் புனித மேரி மேஜர் பெருங்கோவிலின் நிர்வாகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “இது தொடர்பாக தேவையான வழிமுறைகளை புனித மேரி மேஜர் பெருங்கோவிலின் இணைத்தலைமைக்குரு கர்தினால் Rolandas Makrickas, அவர்களுக்கு நான் வழங்கியுள்ளேன்” என்றும் தனது விருப்ப ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “என்னை அன்புகூர்ந்தவர்களுக்கும், எனக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்தவர்களுக்கும் இறைவன் தகுந்த வெகுமதியை வழங்குவாராக” என்று மொழிந்துள்ள திருத்தந்தை, “என் வாழ்க்கையின் இறுதிப் பகுதியைக் குறிக்கும் துன்பத்தை, உலக அமைதிக்காகவும், மக்களிடையே உடன்பிறந்த உறவு ஏற்படுவதற்காகவும் நான் இறைவனிடம் அர்ப்பணிக்கிறேன்” என்று கூறி தனது இறுதி விருப்ப ஆவணத்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்