நம்மை உயர்த்திப் பிடிக்கும் கடவுளின் அன்பும் அருளும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நம்மைக் காப்பாற்ற எப்போதும் நம் அருகில் இருக்கும் கடவுள் மீதான நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க, தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன என்றும், வாழ்வில் சோதனைகள் மற்றும் துன்பங்கள் அதிகமாகும்போது கடவுளின் அருளும் அன்பும் நம்மை இன்னும் நெருக்கமாகப் பிடித்து வாழ்வில் உயர்த்துகின்றன என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்வுக்கான யூபிலி நாள் திருப்பலியினை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை எடுத்துரைத்தார் புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா.
நாடுகடத்தப்படுதல்,வன்முறை, பாவம், எதார்த்த வாழ்வு ஆகியவை நம் கதவருகில் நின்று தட்டும் கடவுளைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும், நாம் எப்போது அவரை உள்ளே நுழைய அனுமதிக்கின்றோமோ அப்போதே அவர் நம் வாழ்க்கைக்குள் நுழையத் தயாராக இருக்கின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
மிகக்கடினமானது நோய்
நோய் என்பது மிகவும் கடினமானது, வாழ்வைக் கடினமாக்குவது என்றும், நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், முதல் வாசகத்தில் வரும் நாடுகடத்தப்பட்ட மக்களைப் போன்றோ அல்லது நற்செய்தியில் வரும் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைப் போன்றோ நாமும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையற்றவர்களாக சில நேரங்களில் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திற்கான நம்பிக்கையற்றவர்களாக நாம் இருக்கும் தருணத்தில் கூட, கடவுள் நம்மைத் தனியாக விடுவதில்லை என்றும், தோல்வியடையும் சூழலிலும் கடவுளின் ஆறுதலின் உடனிருப்பை நாம் அனுபவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனிதர்களாகிய நம்மைப் படைத்து, நமது அனைத்து பலவீனங்களிலும் பங்கு கொள்ள விரும்பிய இறைவன், துன்பம் என்றால் என்ன என்பதை நன்கு அறிவார், எனவே, நாம் அவரிடம் நம் துன்பத்தை, வலியை எடுத்துச் சொல்ல முடியும், அவரிடம் அதை ஒப்படைக்க முடியும் என்றும், கடவுளது இரக்கம், உடனிருப்பு மற்றும் மென்மை ஆகியவற்றை நாம் உறுதியாகக் காணமுடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
அவரது அன்பின் நம்பிக்கையில், நாம் இணைவதால் ஒருவருக்கொருவர் வானதூதர்களாக, அவரது உடனிருப்பின் தூதர்களாக மாற முடியும் என்றும், இதனால் நோயாளர்கள், அவர்களைப் பராமரிப்பவர்கள், நோயாளாரின் படுக்கை ஆகியவை விடுதலை மற்றும் மீட்பளிக்கும் ஒரு புனித இடமாக மாற்றப்படும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நலவாழ்வுப் பணியாளர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளர்கள், குறிப்பாக மிகவும் பலவீனமானவர்களைக் கவனித்துக் கொள்ளும்போது, தங்களது வாழ்க்கையைத் தொடர்ந்து புதுப்பித்து, நன்றியுணர்வு, இரக்கம் மற்றும் நம்பிக்கையால் அதனை வளர்க்கும் வாய்ப்பை இறைவன் அவர்களுக்கு வழங்குகிறார் என்றும், அனைத்தும் கடவுளிடமிருந்து வந்த கொடை என்பதை தாழ்ச்சியுள்ள விழிப்புணர்வால் ஒளிரச்செய்ய நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
நோயாளர்கள் ஒவ்வொருவரும் வாழ்வின் இத்தகைய பலவீனமான நேரத்தில் அன்பு செலுத்தவும், அன்பு செலுத்தப்படவும், வாழ்க்கை என்னும் பள்ளியில் கற்றுக்கொள்கிறோம் என்றும், எதிர்பார்ப்பு, நிராகரிப்பு, வருத்தம், விரக்தி போன்றவை இன்றி, நாம் பெறுகின்ற நன்மைக்காகக் கடவுளுக்கும் உடன் சகோதர சகோதரிகளுக்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
"மனிதகுலத்தின் அளவானது அடிப்படையில் துன்பத்துடனான உறவில் தீர்மானிக்கப்படுகிறது" என்றும் "துன்பத்தை ஏற்றுக்கொள்ளத் தவறும் ஒரு சமூகம் ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற சமூகம்" என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை 16ஆம் பெனடிக் அவர்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றாக துன்பத்தை எதிர்கொள்வது நம்மை மேலும் மனிதர்களாக ஆக்குகிறது, மேலும் வலியைப் பகிர்ந்து கொள்வது புனித வாழ்வுப் பயணத்தின் ஒரு முக்கியமான படி என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்