அமைதியின் திருத்தந்தையாகத் திகழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்.
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அமைதிக்காக தனது விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் இடையறாது எடுத்துரைத்தவர். போர் மற்றும் வன்முறையால் துன்புறுபவர்கள், ஏழைகள், வலுகுறைந்தவர்கள், ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்தவர். எடுத்துக்காட்டாக, தான் இறுதியாக வழங்கிய, ‘ஊருக்கும் உலகிற்கும்’ எனப் பொருள்படும் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தியிலும் கூட, உலக அமைதிக்காக மக்கள் அனைவரும் செபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர். போரில் ஈடுபடும் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் போரினை விடுத்து, உரையாடல் வழிகளில் அமைதிக்கான தீர்வுகளை நாடவேண்டும் என்பதை அதிகமாக வலியுறுத்திவர்.
மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், இயல்பாக சுவாசிக்க முடியாமலும், பேச முடியாமலும் இருந்த நிலையிலும் கூட உலக அமைதிக்காக செபிக்க மறக்காதவர். தன்னால் திருப்பயணிகளுக்குக் கருத்துக்களை எடுத்துரைக்க இயலாத நிலையிலும், கர்தினால்கள் மற்றும் ஆயர்களை தனது கருத்துக்களை எடுத்துரைக்கும்படி கூறியவர். பன்னிரண்டு ஆண்டு காலம் திருத்தந்தையாகப் பணியாற்றி திருஅவையை சீரும் சிறப்புமாக வழிநடத்தி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகக் கத்தோலிக்க இயக்கங்களுக்கு அமைதிக்கான செயல்பாடுகளை தனது வார்த்தைகள், செயல்பாடுகள், முடிவுகள் போன்றவற்றின் வழியாக எடுத்துரைத்தவர்.
நல்லிணக்கத்தின் ஆற்றல், உரையாடலின் முக்கியத்துவம் வன்முறையை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான அவசர நிலை ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்.
போர், வன்முறை மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர எப்போதும் நேரம் எடுத்துக் கொண்ட திருத்தந்தை, ஊடகங்களின் கவனத்தை அதிகம் பெறும் பகுதிகளில் அமைதிக்காக செபிக்கும் அதேவேளையில், மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட, ஆனால் உலகத்தால் அதிகம் மறக்கப்பட்ட சில பகுதிகளுக்காக செபிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர்.
உலக அமைதிக்கான வேண்டுகோள்
உலக அமைதியை அதிகம் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று, 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்சூடான் நாட்டின் தலைவர்களின் கால்களை முத்தமிட்டு அமைதியின் பாதைகளைத் தொடர வலியுறுத்தியது. பயங்கரமான உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட தென்சூடான் அரசுத்தலைவர் சல்வா கீர் மற்றும் அவரது போட்டியாளரான ரீக் மச்சாரை அவர்களை வத்திக்கானில் வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணிவுடன் அவர்களின் கால்களை முத்தமிட்டு, தலைவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அமைதிப் பாதைகளைத் தொடருமாறு வலியுறுத்தினார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், தென்சூடானுக்குப் காண்டர்பரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து தலத்திருஅவையின் தலைவருடன் இணைந்து திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, போரின் கொடூரமான விளைவுகளை அனுபவித்த மற்றும் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்பும் ஆறுதலும் தரும் உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பின்னர், ஜூபாவில் உள்ள அரசு மாளிகையில் அந்நாட்டின் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப் படையினரிடம் உரையாற்றிய போது, "நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதன் அடிப்படையில் தான் எதிர்கால தலைமுறையினர் உங்கள் பெயர்களை நினைவுகூர்வார்களா அல்லது உங்களின் நினைவை மறந்துவிடுவார்களா என்பது தெரியவரும்” என்று துணிவுடன் மொழிந்தவர்.
அமைதிக்கான கூக்குரல்
அமைதிக்கான அவரது கூக்குரல், கடந்த காலப் போர்களின் மரபு, நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையில் செய்யப்பட்ட வன்முறை நிகழ்வுகளால் ஏற்பட்ட வடுக்கள் மற்றும் சில தவறுகள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் பார்த்துக் கொள்வதையும் அதிகமாக வெளிப்படுத்தியது. 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அணு ஆயுதங்களுக்கு எதிராக வலிமை வாய்ந்த வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். அணுகுண்டுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அழிவை ஏற்படுத்திய அதே இடத்தில், நாகசாகியில் உள்ள பூங்காவில் நின்று, ஆயுதங்களாலும் அவற்றை வைத்திருப்பவர்களாலும் ஏற்பட்ட பேரழிவைக் கண்டித்தார். "போர் நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதும், அணு ஆயுதங்களை வைத்திருப்பதும் ஒழுக்கக்கேடானது" என்று துணிவுடன் கூறினார்.
துன்புறுவோரிடம் நெருக்கத்தையும், உலகளாவிய வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வலியுறுத்தல்களையும் எப்போதும் தனது உரைகளில் எடுத்துரைத்தவர். மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள மக்களுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடி தனது உடனிருப்பை வெளிப்படுத்தியவர். அவர், போரில்லாத உலகிற்காக மட்டுமன்று, நீதி, உரையாடல், உடன் பிறந்த உணர்வு கொண்டிருத்தல் போன்றவற்றிற்காகவும் குரல் எழுப்பியவர். எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற தலைப்பில், இந்த 2025 யூபிலி ஆண்டினை அர்ப்பணித்த திருத்தந்தை அவர்களின் செய்திகள், கருத்துக்கள், உடனிருப்பு, அமைதிக்கான தேவை ஆகியவை திருஅவையிலும், மனிதகுலம் முழுவதிலும் இன்று மட்டுமல்லாது என்றென்றும் தொடர்ந்து எதிரொலிக்கும் என்பது திண்ணம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்