கடவுளின் அரவணைப்பில் திருத்தந்தையின் ஆன்மாவை அர்ப்பணிப்போம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
“திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திருஅவைக்கும் அளவில்லாத துயரத்தையும், பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது” என்று திருத்தந்தையின் மறைவு குறித்து இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் மத்தேயு சூப்பி அவர்கள் கூறினார். “இறைத்தந்தையின் கரங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மாவை அர்ப்பணித்து செபிப்போம்” என்று கூறிய கர்தினால் சூப்பி அவர்கள், “’இறை இரக்கத்தில் எல்லாம் வெளிப்படுகின்றது, இரக்கமுள்ள தந்தையின் அன்பினால் எல்லாம் தீர்க்கப்படுகின்றது’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தியது போல, கடவுளின் அரவணைப்பில் அவர் ஆன்மாவை ஒப்படைப்போம்” என்றும் தெரிவித்தார்.
மேலும் “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைபதம் அடைந்ததன் அடையாளமாக இத்தாலியில் உள்ள அனைத்துத் தலத்திருஅவைகளின் கோவில் மணிகளும் ஒலிக்கப்பட வேண்டும்” என்றும், “நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு செபத்தின் வழியாக ஒருவர் மற்றவருடனும், உலகளாவியத் திருஅவையுடனும் நமது ஒன்றிப்பை வெளிப்படுத்துவோம்” என்றும் உரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு ஏராளமான அரசுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர். இத்தாலிய காரித்தாஸ் வலையமைப்பின் சார்பாக, அருள்தந்தை Marco Pagniello அவர்கள், "ஏழைகளை மறந்துவிடக் கூடாது" என்று அண்மைய ஆண்டுகளில் அடிக்கடி வலியுறுத்தி வந்த திருத்தந்தை அவர்கள் தனது செயல்கள் மற்றும் வார்த்தைகள் வழியாக உலகின் கடை நிலையில் இருக்கும் மக்கள் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்” என்றும், “அமைதியை வலியுறுத்தும் திருத்தந்தையாகவும், சமூக அநீதிகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உலகளாவிய அலட்சியத்தை கடுமையாகக் கண்டித்தும் குரல் எழுப்பியவர் திருத்தந்தை” என்றும் கூறினார்.
மேலும் “நற்செய்தியின் பாதையில் நடந்து, அனைவரும் சகோதரர் சகோதரிகளாக, ஒருவருக்கொருவர் இணைந்து நடப்பதன் அழகை மீண்டும் கண்டறிய அழைப்பு விடுத்த திருத்தந்தை அவர்கள் விதைத்த விதையானது, கிறிஸ்தவர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களின் இதயங்களிலும் தொடர்ந்து முளைக்கும்” என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார் அருள்தந்தை மார்கோ.
“திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு, இத்தாலிய மக்களிடையேயும் உலகம் முழுவதும் வாழும் மக்களிடையேயும் துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது” என்றும், “மக்களிடையே நிலவேண்டிய ஒன்றிப்பு, வலுவற்றவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டியதன் கடமை, பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் மனித குலத்தில் அமைதி ஆகியவற்றை திருத்தந்தையின் கருத்துக்கள் நினைவுபடுத்துகின்றன” என்றும் இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்கள் திருத்தந்தையின் மறைவு குறித்துத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்