மூச்சுக்குழல் அழற்சி நோய்க்கான சிகிச்சை பெற்றுவந்த திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
1957-ஆம் ஆண்டு தனது 20-வது வயதில் அர்ஜெண்டினாவில் மூச்சுக்குழல் நோயால் பாதிக்கப்பட்டு தனது நுரையீரலின் ஒரு பகுதியை இழந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். தொடர்ந்து தனது வாழ்நாளில் மூச்சுக்குழல் நோய் தொடர்பான பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டு வந்த திருத்தந்தை, இறுதியாக மூச்சு விடுவதிலும் இயல்பாகப் பேசுவதிலும் பல சிரமங்களை மேற்கொண்டார். கடந்த, 2023-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவேண்டிய திருத்தூதுப் பயணம் ஒன்றையும் தனது நுரையீரல் நோய்த்தொற்றுக் காரணமாக இரத்து செய்தார்.
2025-ஆம் ஆண்டு கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை பிற்பகலில், உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய் (Bronchitis) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறக்குறைய 38 நாள்களுக்குப் பின் மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை மார்ச் 23-ஆம் தேதி, தான் உடல் நலம்பெற்று வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லம் திரும்பும் முன் இறைமக்களைச் சந்தித்தார். அதன்பின் ஏறக்குறைய இரண்டு வாரங்கள் சாந்தா மார்த்தா இல்லத்தில் ஓய்விலிருந்த திருத்தந்தை, முதன்முறையாக ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்வுக்கான யூபிலி திருப்பலி வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெற்றபோது, திருப்பயணிகளை வாழ்த்துவதற்காகவும் நன்றி கூறுவதற்காகவும் திருப்பலியின் நிறைவில் வத்திக்கான் வளாகம் வந்து மக்களை வாழ்த்தினார். அதன்பின் ஏப்ரல் 10, வியாழனன்று, தூய பேதுரு பெருங்கோவிலுக்குள் சென்று திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் அவர்களின் கல்லறை முன் சிறிது நேரம் செபித்தார்.
இறுதியாக, ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமையன்று, வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியின் நிறைவில், ‘ஊருக்கும் உலகுக்கும்’ என அழைக்கப்படும் ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச் செய்தியை வழங்குவதற்காக நடுமாடத்திற்கு வந்து திருப்பயணிகளை வாழ்த்தினார். மேலும் அச்செய்தியின் நிறைவில் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகளின் நடுவில் திறந்த காரில் வலம்வந்து திருப்பயணிகளைச் சந்தித்து ஆசீர் வழங்கினார். ஏறக்குறைய 20 நிமிடங்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளை வாழ்த்தியதுதான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதி நிகழ்வாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்