MAP

சாந்தா மார்த்தா இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் திருத்தந்தையின் உடல் சாந்தா மார்த்தா இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் திருத்தந்தையின் உடல்  (ANSA)

செபத்தின் மேன்மையை வலியுறுத்தியவர் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள், தலத்திருஅவைகளின் தலைவர்கள், கத்தோலிக்க அமைப்புக்கள் என பலர் தங்களது இரங்கல் செய்தியை எடுத்துரைத்து வருகின்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த நாள், திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 21) மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற பல்வேறு ஆலயங்களில் சிறப்பு செபவழிபாடுகள் இடம்பெற்றன. அதன்படி வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்திலும், மேரி மேஜர் பெருங்கோவில் வளாகத்திலும் ஏப்ரல் 21, திங்கள்கிழமை மாலை செபமாலை வழிபாடு நடைபெற்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள், தலத்திருஅவைகளின் தலைவர்கள், கத்தோலிக்க அமைப்புக்கள் என பலர் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

இயேசு சபைத் தலைவர் அருள்பணி Arturo Sosa.

இறைத்தந்தையின் நிலைவாழ்வில் முழுமையாகப் பங்கேற்பதற்காக உயிர்ப்பின் கதவை நமக்காகத் திறந்த இயேசுவில் இணைய, மண்ணக வாழ்வினை முடித்து விண்ணகத்தில் பிறப்பெடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றது என்று தெரிவித்துள்ளார் இயேசு சபை தலைவர் அருள்பணி Arturo Sosa.

உலகளாவிய திருஅவையின் தலைவராக கடந்த 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவரும், இயேசு சபை அருள்பணியாளருமான ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்னும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்காக வருந்தும் அனைத்து மக்களுடன் இணைந்து அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் அருள்பணி சோசா.

திருத்தந்தையின் வாழ்நாள் முழுவதும், அவர் செய்த பணிகள் வழியாக திருஅவையும் உலகமும் பெற்றுக்கொண்ட பல நன்மைகளுக்காகவும், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் உணர்வுகள் மற்றும் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதற்கான அவரின் முயற்சிகளுக்காகவும், தனக்கு முன்னிருந்த திருத்தந்தையர்களைப் பின்பற்றி திருஅவையை எவ்வாறு வழிநடத்துவது என்பதை அறிந்திருந்ததற்காகவும், இரக்கம் நிறைந்த இறைத்தந்தைக்கு நன்றி கூறுவோம் என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணி சோசா.

2013-ஆம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளன்று அவர் வலியுறுத்திய இரண்டு கருத்துக்களை நினைவுகூர்ந்துள்ள அருள்பணி சோசா அவர்கள், ஆயர்களும் இறைமக்களும், உடன்பிறந்த உணர்வு, அன்பு, நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பாதையில் ஒன்றிணைந்து நடக்க வேண்டியதன் முக்கியத்துவம், செபத்தின் மேன்மை போன்றவற்றை அதிகமாக வலியுறுத்தியவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும்  பெருமைகொண்டுள்ளார்.

இறைத்தந்தையின் எல்லையற்ற அன்பு மற்றும் இரக்கத்தை தனது வாழ்வாலும் போதனையாலும் நமக்கு வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் இளைப்பாறுதலைப் பெற தொடர்ந்து செபிப்போம் என்றும், எளிமையும் தாழ்ச்சியும் கொண்டவருமான இயேசுவைப் பின்பற்றி வாழ வேண்டும் என்ற நமது விருப்பத்தை புதுப்பித்து வாழ்வோம் என்றும் அவ்விரங்கல் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார் அருள்பணி சோசா.

அர்மாக் மறைமாவட்ட துணை ஆயர் மைக்கேல் ரூட்டர்

கடந்த 12 ஆண்டுகளாக திருஅவைக்கு ஆழமான ஆன்மிகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் தலைவராக இருந்தவர் திருத்தந்தை என்றும், மிகுந்த பணிவு, இரக்கம் மற்றும் நற்செய்திக்கு உறுதியான அர்ப்பணிப்புடன் இறைமக்களை வழிநடத்தியவர் என்றும் இரங்கல் செய்தியில் எடுத்துரைத்துள்ளார் வடக்கு அயர்லாந்தின் அர்மாக் மறைமாவட்ட துணை ஆயர் மைக்கேல் ரூட்டர்.

அருள்பணியாளர், ஆயர் என, தனது தொடக்க நாள்களிலிருந்தே எளிமையாக இருந்தவர் திருத்தந்தை என்று கூறியுள்ள ஆயர் ரூட்டர் அவர்கள், மக்களுக்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் என்றும், தனது மந்தையாம் இறைமக்களுடன் நெருக்கமாக நடக்கும் ஒரு மேய்ப்பனின் இதயத்தைக் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்

​​ஏழைகள் மீதான அன்புக்கும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான அவரது விருப்பதிற்கும் பெயர் பெற்ற அசிசி நகர் புனித பிரான்சிஸ் பெயரைத் தனதாக்கிக் கொண்ட திருத்தந்தை அவர்கள்,  அதிகமான சவால்களை எதிர்கொள்ளும் திருஅவைக்கு, குணப்படுத்துதலைக் கொண்டுவரும் பணியை ஏற்றுக்கொண்டார் என்று எடுத்துக்காட்டியுள்ள ரூட்டர் அவர்கள், திருஅவையின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப அவர் அயராது உழைத்தார், முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் கண்ணோட்டங்களிலிருந்து கத்தோலிக்கர்களிடையே ஒன்றிப்புக்கு அழைப்பு விடுத்தார் என்றும் பகிர்ந்துள்ளார்.

மேலும் தலத்திருஅவை தலைவர்கள் மட்டுமன்றி, பல்வேறு திருத்தலங்களின் தந்தையர்களும், இறைமக்களும் திருத்தந்தையின் மறைவிற்குத் தங்களது இரங்கல் செய்தியை செபத்தின் வழியாகவும் வார்த்தைகள் வழியாகவும் தெரிவித்து வருகின்றனர். இத்தாலியிலுள்ள லொரேத்தோ மற்றும் பொம்பே அன்னை மரியா திருத்தலத்தில் உள்ள மக்களும் திருத்தந்தையின் மறைவிற்குத் தனிப்பட்ட விதமாகவும் குழுவாகவும் இணைந்து தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஏப்ரல் 2025, 13:03