MAP

திருத்தந்தையின் மறைவையொட்டி ஐரோப்பிய ஒன்றியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது திருத்தந்தையின் மறைவையொட்டி ஐரோப்பிய ஒன்றியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது  (ANSA)

உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகள்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் : கோவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைக்காக நான் எப்போதும் அவரை நினைவில் கொள்வேன். அது மிகவும் அழகாக இருந்தது. கடவுள் அவரது ஆன்மாவை அமைதிப்படுத்தட்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

"அமைதியில் இளைப்பாறுங்கள் திருத்தந்தை பிரான்சிஸ்", என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை திருத்தந்தை பிரான்சிஸ் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அந்தப் பதிவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மேலானியாவை திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தபோது எடுத்த புகைப்படமும், துணை அதிபர் ஜே.டி. வான்ஸை திருத்தந்தை சந்தித்தபோது எடுத்த புகைப்படமும் இடம்பெற்றிருந்தன.

இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருத்தந்தை பிரான்சிஸ் காலமான செய்தியை இப்போதுதான் அறிந்தேன். உலகம் முழுவதும் அவரை நேசித்த கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது. நேற்று அவரைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன், இருப்பினும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் கோவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைக்காக நான் எப்போதும் அவரை நினைவில் கொள்வேன். அது மிகவும் அழகாக இருந்தது. கடவுள் அவரது ஆன்மாவை அமைதிப்படுத்தட்டும்.” என தெரிவித்துள்ளார்.

"திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்தைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன், அனைவருக்கும் நியாயமான உலகத்தை உருவாக்க அயராத முயற்சிகளை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் சிறந்த நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளார் என எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் குறிப்பிட்டுள்ளார். உலகமும், திருஅவையும் சிக்கலான மற்றும் சவாலான நேரத்தை எதிர்கொண்டபோது, தனது துணிச்சலான தலைமையாலும், பணிவாலும் நிலைமையை சிறப்பாக கையாண்டார். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களுக்கான திருத்தந்தையாக அவர் இருந்தார். பிரிட்டன் மக்களின் சார்பாக, முழு கத்தோலிக்க திருஅவைக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்", என்று திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு தன் இரங்கலை வெளியிட்டுள்ளார் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருத்தந்தை பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் இன்று இரங்கல் தெரிவிக்கிறது. கத்தோலிக்க திருஅவையைத் தாண்டி, அவர் தனது பணிவு மற்றும் ஏழைகள் மீதான தூய அன்பின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தினார். இந்த ஆழ்ந்த இழப்பை உணரும் அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. திருத்தந்தை பிரான்சிஸின் மரபு நம்மை நீதியான, அமைதியான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும். அவரது ஆன்மா ஆறுதல் காணட்டும்.” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த நம்பிக்கையும் எல்லையற்ற இரக்கமும் கொண்ட அவர், ஏழைகளை மேம்படுத்துவதற்கும், பிரச்சினை நிறைந்த உலகில் அமைதிக்காக அழைப்பு விடுப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். மத்திய கிழக்கில் அமைதிக்காகவும், (காசாவில்) பிணையக் கைதிகள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காகவும் அவர் செய்த பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாம் வாழும் காலத்தில் உலகின் மிக முக்கிய பிரச்சினைகளை அங்கீகரித்து அவற்றிற்கு கவனம் செலுத்திய ஒரு தலைவருக்கு உலகளாவிய கத்தோலிக்க சமூகம் அஞ்சலி செலுத்துகிறது. நிதானமான வாழ்க்கை முறை, சேவை மற்றும் இரக்கச் செயல்கள் மூலம் திருத்தந்தை பிரான்சிஸ், கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கரல்லாதவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். நாங்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளின் தலைவர்களும் தங்கள் இரங்கல் செய்திகளை வத்திக்கானுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஏப்ரல் 2025, 16:12