திருத்தந்தையின் மறைவுக்கு இந்தியாவின் இரங்கல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஏப்ரல் 21 திங்கள்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மரணமடைந்ததை முன்னிட்டு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‛‛திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறைவையொட்டி நாடு முழுவதும் 3 நாட்கள் துக்க தினம் அனுசரிக்கப்பட உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் மற்றும் குறிப்பிட்ட தினங்களில் எவ்வித கொண்டாட்டங்களும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் செவ்வாயும் புதனும் துக்கம் அனுசரிப்பதாகவும், அவர் உடல் அடக்கம் செய்யப்படும் நாள் அன்றும் துக்க நாளாக அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்திய அரசியல் தலைவர்கள்
"திருத்தந்தை பிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் கருணை, பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக திருத்தந்தை பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்", என திருத்தந்தை அவர்களுக்கு இரங்கல் தெரித்துள்ளார். மேலும் அந்த எக்ஸ் தள பதிவில் நரேந்திர மோடி அவர்கள், "ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார். அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா அமைதியைக் காணட்டும்", என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அவர்கள், "கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான திருத்தந்தை பிரான்சிஸின் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் ஆதரவாக நின்றார், சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசினார், அன்பு மற்றும் மனிதநேயம் பற்றி தன்னுடைய போதனைகளால் மதங்களைக் கடந்து கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்" என தன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இரங்கல் செய்தி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருத்தந்தை பிராஸ்சிஸ் அவர்களின் மறைவையொட்டி இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில், “கத்தோலிக்க திருஅவையின் தலைவராகவும், பரிவோடும் முற்போக்கு கொள்கைகளோடும் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் தனது 88வது வயதில் மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் கொள்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் இரக்கமுள்ளவராக, முற்போக்கு குரலாக, பணிவு, அறநெறிசார், துணிவு மற்றும் ஆழமான மனித நேயத்துடன் திருஅவையை வழிநடத்தினார். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடல்களுக்கான அவரது முன்னெடுப்புகள் ஆகியவை கத்தோலிக்க உலகத்தை தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத் தந்தன. அவரது மறைவால் வாடும் கத்தோலிக்க திருஅவைக்கும், உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கும் இப்பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” என கூறப்பட்டது. பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
திருத்தந்தையின் மறைவையொட்டி தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கத்தோலிக்க திருஅவையையை உணர்வுத்திறன் மிக்கதாகவும், முற்போக்கு விழுமியங்களுடனும் வழிநடத்திய திருத்தந்தை பிரான்ஸிஸ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள், மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான அவரது வாதங்கள் கத்தோலிக்க உலகிற்கு அப்பால் அவருக்கு மரியாதையைப் பெற்றுத்தந்துள்ளன. இரக்கம் மற்றும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையை மனித குலத்துக்கு விட்டுச் சென்றுள்ளார்" என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்