திருத்தந்தையின் உடல் அடக்கப் பெட்டிக்குள் மூடப்படுகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இவ்வாரம் புதன்கிழமையிலிருந்து, அதாவது ஏப்ரல் 23ஆம் தேதியிலிருந்து பொதுமக்களின் பார்வைக்கென வைக்கப்பட்டுள்ள திருத்தந்தையின் உடல் இவ்வெள்ளிக்கிழமை இரவு, இத்தாலிய நேரம் 8 மணிக்கு, அதாவது இந்திய நேரம் இரவு 11 மணி 30 நிமிடங்களுக்கு அடக்கப் பெட்டிக்குள் வைத்து மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையின் அடக்கத் திருப்பலிக்கென திருத்தந்தையின் உடல் மூடப்படும் வழிபாட்டுச் சடங்கிற்குமுன் இத்தாலிய நேரம் மாலை 7 மணிவரை புனித பேதுரு பெருங்கோவில் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி நேரம் வரை திருத்தந்தையின் உடலை தரிசித்து செபிக்க விரும்புவர்களுக்கு உதவும் நோக்கத்தில், ஏற்கனவே வரிசையில் நிற்பவர்களுடன் ஏனையோர் மாலை 6 மணிக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் உடலை இறுதியாக பெட்டியில் வைத்து மூடும் வழிபாட்டுச் சடங்கிற்கு கமர்லெங்கோ எனப்படும் திருத்தந்தையின் திருத்துணைவர் குழுவின் கருவூலத் தலைவர், கர்தினால் Kevin Farrell அவர்கள் தலைமை தாங்கி நடத்தவுள்ளார்.
இத்தாலிய நேரம் இரவு 8 மணிக்கு இடம்பெறும் இந்த வழிபாட்டில் கர்தினால்களும் திருப்பீட அதிகாரிகளும் கலந்துகொள்வர்.
கர்தினால்கள் ஜுவானி பாத்திஸ்தா ரே, பியெத்ரோ பரோலின், ரோஜர் மஹோனி, தொமினிக் மம்பெர்த்தி, மௌரோ கம்பெத்தி, பல்தசாரே ரெய்னா, கொன்ராடு க்ராயெவிஸ்கி ஆகியோர் முன்னிலையில் திருத்தந்தையின் அடக்கப் பெட்டி மூடப்பட்டு முத்திரையிடப்படும்.
சனிக்கிழமை காலை உள்ளூர் நேரம் 10 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் அடக்கத் திருப்பலி நிறைவேற்றப்படும்.
அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, இறைஇரக்க ஞாயிறை முன்னிட்டு புனித பேதுரு வளாகத்தில் காலை உள்ளூர் நேரம் 10.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்