பாப்புவா நியூ கினி மற்றும் வெனிசுவேலாவின் முதல் புனிதர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பாப்புவா நியூ கினி நாட்டில் திருமறைக்காக மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட ஒரு பொது நிலையினர், அர்மேனிய படுகொலையின்போது கொல்லப்பட்ட ஒரு பேராயர், பெண்துறவுசபை ஒன்றை நிறுவிய அருள்கன்னிகை என மூவரை புனிதர்களாக அறிவிப்பதற்கான படிநிலைக்கு அங்கீகாரம் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாப்புவா நியூ கினியின் மறைசாட்சி Peter To Rot, அர்மேனியாவின் மறைசாட்சி Ignatius Choukrallah Maloyan, வெனிசுவேலாவின் அருள்கன்னிகை Maria del Monte Carmelo ஆகிய மூவரும் புனிதர் பட்ட படிநிலைகளைக் கடந்துள்ள நிலையில், இறுதிகட்டமாக, விரைவில் புனிதர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.
விரைவில் திருஅவையில் மூவர் புனிதர்களாகவும், ஒருவர் புனிதர்பட்ட நிலைகளுக்கு முந்தைய படியான அருளாளராகவும், மற்றுமொரு இறையடியார் துவக்கப் படியான வணக்கத்துக்குரியவர் எனவும் அறிவிக்கப்பட உள்ளனர்.
பாப்புவா நியூ கினியின் முதல் புனிதராக அறிவிக்கப்பட உள்ள Peter To Rot அவர்கள், 1912 ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி பிறந்து கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்கப்பட்டு மறைக்கல்வி ஆசிரியராக பிறரன்பு, தாழ்ச்சி மற்றும் ஏழைகளுக்கான அர்ப்பணத்தில் சிறந்து விளங்கினார்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பானியர்கள் பாப்புவா நியூ கினியை ஆக்ரமித்தபோது, தடையையும் மீறி மேய்ப்புப் பணி அலுவல்களில் ஈடுபட்டதால் இரண்டு மாதங்கள் சிறைவாசம் பெற்று சிறையிலேயே விஷம் வைத்து 1945ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
இவரை Port Moresby நகரில் 1995ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அருளாளராக அறிவித்தார் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்.
இரண்டாவது அருளாளரான பேராயர் Ignatius Choukrallah Maloyan அவர்கள் இன்றைய துருக்கி நாட்டிலுள்ள Mardin என்னுமிடத்தில் 1869ஆம் ஆண்டு பிறந்து, இலபனோனிலும் எகிப்திலும் மறைப்பணியாற்றி, 1911ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பயஸால் மார்டின் பேராயராக நியமிக்கப்பட்டார்.
துருக்கிய படைகள் முதலாம் உலகப் போரில் நுழைந்தபோது இப்பேராயர் மலோயன் உட்பட 13 அருள்பணியாளர்கள் மற்றும் 600 பொதுநிலைக் கிறிஸ்தவர்கள் கைதுச் செய்யப்பட்டு, பேராயரும் அவரின் உடனுழைப்பாளர்களும் 1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி கொல்லப்பட்டனர்.
பேராயர் மலோயனை 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அருளாளராக அறிவித்தார் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்.
வெனிசுவேலா நாட்டில் 1903ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ல் பிறந்து, அந்நாட்டின் முதல் புனிதையாக அறிவிக்கப்பட உள்ள அருளாளர் Maria del Monte Carmelo அவர்களிடம் வேண்டியதால் நிகழ்ந்த புதுமை ஒன்று திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இவரை புனிதராக அறிவிப்பதற்கான வழி திறந்துள்ளது.
ஒரு துறவுமடத்தில் 1927ஆம் ஆண்டு இணைந்து பின்னர் அங்கிருந்து 1946ஆம் ஆண்டு இயேசுவின் பணியாளர்கள் சபையை நிறுவிய இவர் 1977ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி இறைபதம் சேர்ந்தார்.
இத்தாலியின் பாரி நகரைச் சேர்ந்த அருள்பணி Carmelo De Palma என்பவரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றும், பிரேசில் நாட்டில் அரசியல்வாதியாக இருந்து அருள்பணியாளராக மாறிய José Antônio de Maria Ibiapina என்பவரின் வீரத்துவ பண்பும் புனிதர் பட்ட படிகளுக்கென திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்