இயேசு சபையினர் நடத்தும் La Civiltà Cattolica இதழின் 175-ஆம் ஆண்டு நிறைவு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இயேசு சபையினரால் நடத்தப்படும் திருப்பீடச் சார்பு இதழான, La Civiltà Cattolica என்ற இதழின் 175-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 2, புதன்கிழமை இன்று, இவ்விதழின் வெளியீட்டாளர் அருள்பணியாளர் நுனோ தா சில்வா கோன்சால்வ்ஸ், சே.ச, அவர்களுக்கு அனுப்பியுள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், இவ்விதழின் வளர்ச்சிக்குப் பல்வேறு கட்டங்களில் ஒத்துழைப்பை நல்கிவரும் எழுத்தாளர்கள் குழுவிற்கும் இயேசு சபை குழுமத்திற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
“கடந்த 75 ஆண்டுகளாக, இந்த இதழ் பல தலைமுறைகளுடன் நட்புரீதியான உறவை வளர்த்துக்கொண்டு, உலக நிகழ்வுகளை விசுவாசத்தின் ஒளியில் விளக்குவதற்குப் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்கி வருவதற்காக உங்களுடன் இணைந்து இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்” என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
“உண்மைக்கு மரியாதையை ஊக்குவிக்கும், ஒப்பீடு மற்றும் உரையாடலுக்கு இடமளிக்கும் பத்திரிகை நடைமுறையில், திருத்தந்தைக்கும் திருஅவைக்கும் நீங்கள் வழங்கும் அறிவார்ந்த சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் மொழிந்துள்ளார் திருத்தந்தை.
“நற்செய்தியின் மதிப்பீடுகளை மட்டுமே மையப்படுத்தி, அனைத்து மக்களின் குரல்களையும் கேட்டு, இதயத்திற்கு நன்மை செய்யும் இந்த நல்ல பத்திரிகை வழியாக, உங்கள் பணியை மகிழ்ச்சியுடன் தொடர நான் உங்களை ஊக்குவிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
“இந்த நம்பிக்கைகளுடன், உங்களையும் உங்கள் பணிகளையும் அன்னை கன்னி மரியா மற்றும் லொயோலா புனித இஞ்ஞாசியாரின் பரிந்துரை செபங்களில் ஒப்பிவித்து தொடர்ந்து உங்களுக்காக இறைவேண்டல் செய்கிறேன்” என்று கூறியுள்ள திருத்தந்தை, “எனக்காகவும் இறைவேண்டல் செய்யுங்கள்” என்ற வேண்டுகோள் ஒன்றையும் விடுத்து தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்