திருத்தந்தையின் இறுதிச் சடங்கு திருவழிபாட்டு நிகழ்வு குறித்த அறிவிப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 26, வரும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கு திருவழிபாட்டு நிகழ்வு, திருத்தந்தையர்களுக்குரிய இறுதித் திருச்சடங்குகள் (Ordo Exsequiarum Romani Pontificis (எண். 82–109) நிறைவேற்றும் சட்டவிதிகளின்படி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறுதிச் சடங்கு திருவழிபாட்டு நிகழ்வை கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் Giovanni Battista Re அவர்கள் தலைமையேற்று வழிநடத்துவார் என்றும் அவ்வறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இறுதிச் சடங்கு திருவழிபாட்டு நிகழ்வில் முதுபெரும் தந்தையர்கள், கர்தினால்கள், ஆயர்கள், பங்குத் தந்தையர்கள் அனைவரும் பங்குபெறுவது குறித்தும், அவர்கள் எப்போது எங்கே ஒன்றுகூட வேண்டும் என்பது குறித்தும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பலிக் கொண்டாட்டத்தின் முடிவில், இரங்கல் செய்தி மற்றும் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து அவரது உடலைத் தாங்கிய அடக்கப்பெட்டி புனித பேதுரு பெருங்கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்வதற்காக புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குக் எடுத்துச் செல்லப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூட்டுத் திருப்பலியில் பங்கேற்காது திருப்பலிக் கொண்டாட்டத்தில் மட்டுமே பங்கேற்க விரும்புவோர் celebrazioni@celebra.va என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும், பங்கேற்பாளர்கள் அனைவரும் புனித பேதுரு பெருங்கோவிலில் காலை 09.00 மணிக்குள்ளாக வந்துவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்