MAP

ஏழைகளின் நலவாழ்வுக்காக குரல் கொடுத்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் ஏழைகளின் நலவாழ்வுக்காக குரல் கொடுத்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தைக்கு ஏழைகளின் இறுதி வழியனுப்பு நிகழ்வு

உலகில் வறுமையாலும் ஓரங்கட்டப்பட்டதாலும் கடைநிலையில் இருக்கும் மக்கள் 40 பேர், புனித மேரி மேஜர் கோவில் வாசல் படிகளில் நின்றவண்ணம் திருத்தந்தையை வழியனுப்ப உள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தையின் அடக்கத் திருப்பலி புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிறைவுற்று, புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் அவர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தவுள்ளதாக புலம்பெயர்ந்தோர், ஏழைகள், முன்னாள் சிறைக் கைதிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் அடங்கிய குழு தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளது.

இவர்களுள் ஏறக்குறைய 40 பேர் திருத்தந்தையின் உடல் தாங்கிய பெட்டி புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்படும்போது கோவில் படிகளில் நின்ற வண்ணம் தங்கள் கைகளில் வெள்ளை ரோசாவைத் தாங்கியவர்களாக திருத்தந்தைக்கு இறுதி விடையளிப்பர் என உரைத்தார் இத்தாலிய ஆயர் பேரவையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஆயர் பெனானி அம்புருஸ்.

உரோம் நகரின் ரெபிபியா சிறையில் புனிதக் கதவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்து வைத்தபோது திருத்தந்தையை சந்தித்த சிறைக்கைதிகளும் இந்த ஏப்ரல் 26, சனிக்கிழமை அடக்கச் சடங்கின்போது கலந்து கொள்வர் என்ற ஆயர் அம்புருஸ் அவர்கள், புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குள் அன்னை மரியாவாலும் வாழ்வில் அடிநிலையில் இருப்போராலும் திருத்தந்தை வரவேற்கப்படுவது நெஞ்சைத் தொடுவதாக இருக்கும் என எடுத்துரைத்தார்.

உலகில் வறுமையாலும் ஓரங்கட்டப்பட்டதாலும் கடைநிலையில் இருக்கும் மக்கள், திருத்தந்தைக்கான கடைசி வழியனுப்புச் சடங்கில் கலந்து கொள்வது முக்கியத்துவம் நிறைந்ததாக நோக்கப்படுகிறது.

மேரி மேஜர் கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அன்னை மரியா தன் அருகில் வரவேற்கும்போது, திருத்தந்தையால் அன்பு கூரப்பட்ட குழந்தைகள் வழியனுப்புவது சிறப்பு என்றார் ஆயர் அம்புருஸ்.

தற்போது இத்தாலிய காரித்தாஸ் அமைப்பால் திருத்தந்தைக்கு இறுதி விடை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுள் பெரும்பான்மையினர் ஏற்கனவே திருத்தந்தையை ஒருமுறையேனும் சந்தித்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஏப்ரல் 2025, 15:27