MAP

யூபிலி திருப்பயணம் வந்த ஸ்லோவாக்கிய விசுவாசிகள் யூபிலி திருப்பயணம் வந்த ஸ்லோவாக்கிய விசுவாசிகள்  (Vatican Media)

திருத்தந்தை : வாழ்நாளில் எப்போதுமே திருப்பயணியாக நடைபோடுவோம்

விசுவாசம் என்பது மகிழ்ச்சியுடன் பகிரப்படும் ஒரு கொடையாக இருப்பினும், அதுவும் பலவேளைகளில் சவால்களையும் துயர்களையும் எதிர்கொள்கிறது, ஆனால் அதேவேளை, கடவுளில் நம்பிக்கைக்கான வாய்ப்புக்களையும் நமக்கு வழங்குவதாக உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உடல் நலம் காரணமாக ஓய்வெடுத்துவரும் இவ்வேளையில், ஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து தேசிய யூபிலி திருப்பயணம் மேற்கொண்டு உரோம் வந்துள்ளோருடன் தானும் தன் செபம் மற்றும் பாசத்தின் வழி அவர்களோடு இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

யூபிலி ஆண்டையொட்டி உரோம் நகர் வந்துள்ள ஸ்லோவாக்கிய திருப்பயணிகளுக்கு என திருத்தந்தையால் ஏப்ரல் 4ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட இச்செய்தி, அவ்விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தை புதுப்பிக்கவும், உரோமை ஆயருடன் தங்கள் உறவை வலுப்படுத்தவும், ஒருநாளும் ஏமாற்றாத கிறிஸ்தவ எதிர்நோக்கிற்கு மகிழ்ச்சியுள்ள சான்றாக இருக்கவும் இந்த யூபிலி திருப்பயணம் உதவுகிறது என மேலும் கூறுகிறது.

புனிதக் கதவு வழியாக உள் நுழைவதும், திருத்தூதர்கள் மற்றும் மறைசாட்சிகளின் கல்லறைகளை தரிசிப்பதும் நம் வாழ்நாளில் எப்போதும் திருப்பயணியாக நடைபோடும் நம்பிக்கையைத் தருகின்றன என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்கள் சிரிலும், மெத்தோடியசும், ஏனைய மறைச்சாட்சிகளும் உருவாக்கிய ஸ்லோவாக்கிய பாரம்பரியம் குறித்தும் தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

விசுவாசம் என்பது மகிழ்ச்சியுடன் பகிரப்படும் ஒரு கொடையாக இருப்பினும் அதுவும் பலவேளைகளில் சவால்களையும் துயர்களையும் எதிர்கொள்கிறது, ஆனால் அதேவேளை, கடவுளில் நம்பிக்கைக்கான வாய்ப்புக்களையும் நமக்கு வழங்குவதாக உள்ளது என திருத்தந்தையின் செய்தி மேலும் கூறுகிறது.

அன்னை மரியாவைப்போல் இறைத்திட்டங்களுக்கு ஆம் என சொல்பவர்களாக நம் வாழ்வில் செயல்படுவோம் என்ற அழைப்பையும் தன் செய்தியில் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஏப்ரல் 2025, 13:43