MAP

திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் 

திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

திருத்தந்தைக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம், அதாவது ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சைமுறை இரவு நேரங்களில் மட்டும், அதுவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுவருவதாகவும், இரத்த பரிசோதனையின் தரமதிப்பீடுகள் நன்முறையில் இருப்பதாகவும் இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட திருப்பீட தகவல்துறை அறிக்கைத் தெரிவிக்கிறது.

திருத்தந்தையின் மார்பில் எடுக்கப்பட்ட ஊடுகதிர் சோதனை (X-ray) நுரையீரல் பாதிப்பு நன்முறையில் குணமடைந்துவருவதைக் காண்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சிகிச்சை முறைகளும் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், அவரின் இயற்கையாக சுவாசிக்கும் திறனும், பேசும் திறனும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூக்கு வழியாக செயற்கை சுவாசம், அதாவது ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சைமுறை இரவு நேரங்களில் மட்டும், அதுவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சாந்தா மார்த்தா இல்லத்தின் இரண்டாவது மாடியில் உள்ள சிற்றாலயத்தில் நாற்காலியில் அமர்ந்தவண்னம் தினமும் உடனுழைப்பாளர்களுடன் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொள்வதாகவும் கூறும் இவ்வறிக்கை, மருத்துவர்கள் மற்றும் உடனுழைப்பாளர்கள் மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும் கூறுகிறது.

வரும் வாரம் ஞாயிறன்று இடம்பெறும் நோயுற்றோருக்கான யூபிலி திருப்பலிக் கொண்டாட்டங்களுக்கான மறையுரை திருத்தந்தையால் தயாரிக்கப்பட்டு, அதனை புதிய நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் பேராயர் ரினோ பிசிக்கெல்லா வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஏப்ரல் 2025, 15:37