வத்திக்கான் வளாகத்தில் அனைவருக்கும் நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்வுக்கான யூபிலியானது வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்றதை முன்னிட்டு திருப்பயணிகளை வாழ்த்துவதற்காகவும் நன்றி கூறுவதற்காகவும் திருப்பலி நிறைவில் வத்திக்கான் வளாகம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 5,6 ஆகிய நாள்களில் வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்வுக்கான யூபிலி நாளின் நிறைவாக நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்பதற்காக ஏறக்குறைய 90 நாடுகளில் இருந்து வந்திருந்த 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தனர்.
யூபிலி திருப்பலியினை திருத்தந்தை சார்பாக, புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் தலைமையேற்று வழிநடத்தினார். வத்திக்கான் வளாகத்தில் உள்ள மக்களை சந்திக்க வருவதற்கு முன், தூய பேதுரு பெருங்கோவில் புனித கதவு வழியாக நுழைந்து செப மனநிலையில் ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பலி நிறைவில் வத்திக்கான் வளாகத்தினை சக்கர நாற்காலில் அமர்ந்தவண்ணம் வந்து சேர்ந்த திருத்தந்தை அவர்களை, இறைமக்கள் கரவொலியும் மகிழ்வொலியும் எழுப்பி வரவேற்றனர்.
திருப்பலி பீடத்தின் அருகில் இருந்தவாறு மெலிதான குரலில் அனைவருக்கும் ஞாயிறு வணக்கத்தையும், நன்றியினையும் கூறினார் திருத்தந்தை. அதன்பின் திருத்தந்தையின் வாழ்த்துக்களைப் பல்வேறு மொழிகளில் வாசிப்பதற்காகத் தயாராக இருந்தவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை.
மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்து வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லம் வந்து ஏறக்குறைய இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் முதன்முறையாக வத்திக்கான் வளாகம் வந்து திருப்பயணிகளை வாழ்த்தினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்