MAP

வத்திக்கானில் கர்தினால்கள் அவையின் பொது சபைக் கூட்டம் தொடங்கியது

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து இறைவேண்டல், சிந்தனை மற்றும் தயாரிப்புக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கர்தினால்கள் அவையின் முதல் பொது சபைக் கூட்டம் வத்திக்கானில் தொடங்கியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து அமைதியுடன்கூடிய இறைவேண்டலுடன் கர்தினால்கள் அவையின் முதல் பொது சபைக் கூட்டம் வத்திக்கானில் தொடங்கியுள்ளது.

ஏறத்தாழ அறுபது கர்தினால்கள் கூடி, Universi Dominici Gregis  அதாவது, ஆண்டவருடைய அனைத்து உலக மந்தையின் ஆயர் என்னும் திருத்தூதரக ஆணையின்படி (apostolic constitution) வாக்குறுதிகள் எடுத்துக்கொண்டனர். மேலும் திருத்தந்தையின் பதவிக்கான இடம் காலியாக இருக்கும்போது (papal vacancy) அதற்குரிய நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் தொடர்புடைய பத்திகளையும் படித்தனர்.

அப்போது Camerlengo என்று அழைக்கப்படும் திருத்தந்தையின் பொருளகர் கர்தினால் Kevin Farrell அவர்கள், இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதி விருப்ப ஆவணத்தை (spiritual testament) வாசித்தார்.

மேலும் புதிய திருத்தந்தை தேர்வு செய்யப்படும் வரை அருளாளர் பட்டம் வழங்கும் நிகழ்வுகளை ஒத்திவைத்தது இப்பொது சபைக் கூட்டம். ஏப்ரல் 26, வரும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கு திருவழிபாட்டு நிகழ்வு இடம்பெறுகிறது.

ஒன்பது நாட்கள் துக்கம் அனுசரிக்கும் நவநாள், ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமையன்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் தலைமையில் திருப்பலியுடன் தொடங்குகிறது. மேலும் தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு தினசரி திருப்பலிகள் நடைபெறும். மூன்று கர்தினால்களைக் கொண்ட சுழற்சி குழு, ஆட்சிக்கால இடைவெளியில் திருஅவை நிர்வாகத்தில் உதவும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஏப்ரல் 2025, 16:38