MAP

அடக்கத் திருப்பலியில் பங்கேற்ற அரசுத்தலைவர்கள்

ஏறக்குறைய 130 உயர்மட்ட பிரதிதிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலியில் பங்கேற்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏப்ரல் 26, சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலியில் பங்கேற்பதற்காக அதிகாலை முதலே வத்திக்கான் வளாகமானது இறைமக்களால் நிறைந்திருந்தது. வத்திக்கான் நகரத்தை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து வாகனங்கள் திருப்பலியில் பங்கேற்க திரண்டு வரும் மக்கள் கூட்டத்தை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் ஏராளமான மக்கள் தொலை தூரங்களிலிருந்து திருப்பயணிகளாக நடந்தே வத்திக்கான் வளாகத்தை வந்தடைந்தனர். ஏறக்குறைய 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் திருத்தந்தையின் அடக்கத் திருப்பலியில் பங்கேற்றனர். 

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், இத்தாலிய பிரதமர் மற்றும் அரசுத்தலைவர்,  அர்ஜெண்டினாவின் அரசுத்தலைவர், இந்திய அரசுத்தலைவர், பிரான்ஸ், பிலிப்பீன்ஸ், உக்ரைன், போலந்து, தொமினிக்கன் குடியரசு, குரோவேசியா, ஈக்குவதோர், மால்தோவா, லாத்வியா, பிரேசில் ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்கள், இங்கிலாந்து, அயர்லாந்து, நியூஸிலாந்து ஆகியவைகளின் பிரதமர்கள், பெல்ஜியம், ஸ்வீடன், இஸ்பெயின் ஆகியவைகளின் மன்னர்கள், இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர், நார்வேயின் இளவரசர், ஐநா. பொதுச்செயலர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் என ஏறக்குறைய 130 உயர்மட்ட பிரதிதிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத்திருப்பலியில் பங்கேற்றனர்.

ஏப்ரல் 26, சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலியினை கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

ஏப்ரல் 26, சனிக்கிழமை  காலை பெருங்கோவில் வளாகத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்க திருப்பலிக்கு முன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலிற்கு பிரதமர்கள் மற்றும் அரசுத்தலைவர்கள் ஆலயத்திற்குள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்  காலை 10 மணியளவில் பெருங்கோவிலிலிருந்து கர்தினால்கள் வரிசையாக நின்று திருத்தந்தையின் உடலுக்கு வணக்கம் செலுத்த 14 பணியாளர்கள் திருத்தந்தையின் உடலைத் தாங்கியிருந்த அடக்கப்பெட்டியை சுமந்த வண்ணம் வத்திக்கான் வளாகத்தை வந்தடைந்தனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலானது பெருங்கோவிலிலிருந்து எடுத்து வரப்பட்டு வத்திக்கான் வளாகத்தில் வைக்கப்பட்டது. 224 கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் 4756 பேர், ஏறக்குறைய 2 இலட்சம் மக்கள் என வத்திக்கான் வளாகமே திருத்தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த நிறைந்திருத்தது. ஏராளமான பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு பணியாளர்களும் திருத்தந்தையின் அடக்கத்திருப்பலி நிகழ்வினை உலகில் உள்ள மக்களுக்கு எடுத்துச்சொல்ல முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஏப்ரல் 2025, 14:10