அமைதி, இரக்கத்தின் திருத்தந்தையாகத் திகழ்ந்தவர்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஏழைகளை அரவணைத்தவர், ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தவர், நற்செய்தியின் அழைப்பின் பேரில் திருஅவையை முன்னிலைப்படுத்தி வாழ வேண்டும் என்று வலியுறுத்தியவர், அதன்படி தானும் வாழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். திருஅவையையும், எளிய மக்களையும் முன்னிலைப்படுத்திய சிறந்த தலைவர், அமைதி மற்றும் இரக்கத்தின் திருத்தந்தையாகத் திகழ்ந்தவர். விளிம்புநிலை மக்களின் இறைவாக்கினராக வாழ்ந்தவர். 12 ஆண்டுகாலம் திருஅவையை மிகச்சிறப்பாக வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலி நிகழ்வுகள் பற்றி இன்றைய நம் நிகழ்வில் காணலாம்.
ஏப்ரல் 21, திங்கள் கிழமை இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலானது வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நாள் (22 செவ்வாய்) மற்றும் தூய பேதுரு பெருங்கோவிலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக (23, 24, 25) வைக்கப்பட்ட நாள்கள் முதல், ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை மாலை வரை ஏறக்குறைய 2,50,000 மக்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஏப்ரல் 26, சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலியில் பங்கேற்பதற்காக அதிகாலை முதலே வத்திக்கான் வளாகமானது இறைமக்களால் நிறைந்திருந்தது. வத்திக்கான் நகரத்தை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து வாகனங்கள் திருப்பலியில் பங்கேற்க திரண்டு வரும் மக்கள் கூட்டத்தை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், ஏராளமான மக்கள் தொலை தூரங்களிலிருந்து திருப்பயணிகளாக நடந்தே வத்திக்கான் வளாகத்தை வந்தடைந்தனர். ஏறக்குறைய 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் திருத்தந்தையின் அடக்கத் திருப்பலியில் பங்கேற்றனர்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலியினை கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்