திருத்தந்தையைச் சந்தித்த 94 வயது அருள்சகோதரி பிரன்செஸ்கா
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது, எதிர்பாராத மகிழ்ச்சியினைத் தனக்கு அளித்ததாகவும், நாம் ஒரு காரியத்தைக் கடவுளிடம் கேட்கும்பொழுது அவர் அதனை நமக்கு கட்டாயம் நிறைவேற்றித்தருவார் என்றும் கூறினார் அருள்சகோதரி பிரன்சேஸ்கா பத்திலோரோ (Francesca Battiloro)
ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை நோயாளர்களுக்கான யூபிலியில் பங்கேற்பதற்காக நேப்பிள்ஸ் பகுதியிலிருந்து வத்திக்கான் வந்திருந்த 94 வயது அருள்சகோதரி பிரன்சேஸ்கா பத்திலோரோ அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலினுள் திருத்தந்தையை சந்தித்து உரையாடியது பற்றி வத்திக்கான் செய்திகளிடத்தில் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.
வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகளைச் சந்திப்பதற்கான பெருங்கோவில் வழியாக வந்த திருத்தந்தையை, எதிர்பாராத விதமாகத் தான் சந்தித்ததாக எடுத்துரைத்த அருள்சகோதரி அவர்கள், “நான் கடவுளைச் சந்திக்குபடிக் கேட்டிருந்தேன் ஆனால் அவர் எனக்கு அந்த வாய்ப்பை அளிக்கவில்லை” என்று நகைச்சுவை உணர்வுடன் திருத்தந்தை தனக்கு பதில் அளித்ததாகவும் பகிர்ந்துகொண்டார்.
தனது கரங்களைப் பிடித்து நேப்பிள்ஸிலிருந்து வந்திருக்கும் அருள்சகோதரி நீங்கள் தானா என்று திருத்தந்தை தன்னைப் பார்த்து கேட்டதாகக் கூறிய அருள்சகோதரி அவர்கள், திருத்தந்தையைச் சந்திக்க அனுமதி கேட்டபோது அவரது உடல்நிலை கருதி அவ்வாய்ப்ப்பு கிடைக்கவில்லை என்றும், ஆனால் கடவுள், திருத்தந்தையே வந்து தன்னை சந்திக்கும்படி வாய்ப்பளித்தார் என்றும் எடுத்துரைத்தார்.
தனது 8 வயதில் கார்மல் துறவற மடத்திற்குள் நுழைந்து, 17ஆவது வயதில் துறவற வார்த்தைப்பாடுகளை ஏற்று, ஏறக்குறைய 75 ஆண்டுகள் அடைபட்ட துறவற மடத்தில் வாழ்ந்து வரும், அருள்சகோதரி பிரன்சேஸ்கா பத்திலோரோ அவர்கள், தனது சிறிய விருப்பங்களிலும் கடவுள் செயல்பட்டு தனது ஆசையை நிறைவேற்றுகின்றார் என்றும் எடுத்துரைத்தார்.
புனித கதவு வழியாக நுழைந்து இறையாசீர் பெற வேண்டும் என்று நினைத்த அருள்சகோதரி அவர்கள், சிறப்பு அனுமதி பெற்று, வத்திக்கான் வளாகத்தில் திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது புனித கதவு வழியாக நுழைந்தார் என்றும், தூய பேதுரு கல்லறை அருகில் செபித்துக்கொண்டிருந்தபோது திருத்தந்தையின் வருகையை உணர்ந்து அவரைச் சந்தித்ததாகவும் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலனுக்காக அதிகமாகத் தொடர்ந்து செபிப்பதாக எடுத்துரைத்த அருள்சகோதரி அவர்கள், “கடவுளுக்கு எனது வாழ்க்கையை அப்பணித்து விட்டேன் அவர் உங்களை குணப்படுத்துவார்” என்று திருத்தந்தையிடம் எடுத்துரைத்து மகிழ்வுடன் இல்லம் திரும்புவதாகவும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்