MAP

மறைந்த திருத்தந்தைக்கு அஞ்சலி செலுத்த குவிந்துள்ள மக்கள் மறைந்த திருத்தந்தைக்கு அஞ்சலி செலுத்த குவிந்துள்ள மக்கள்  

சீனக் கிறிஸ்தவர்கள் திருத்தந்தையின் மறைவுக்கு அஞ்சலி!

திருத்தந்தையின் மறைவு குறித்து சீன அரசிடமிருந்தோ அல்லது அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயர் பேரவையிடமிருந்தோ எவ்வித இரங்கல் செய்தியும் வெளியிடப்படவில்லை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சீனாவிலுள்ள ஹாங்காங் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் தங்களின் சிறப்பு வழிபாட்டில்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நினைவுகூர்ந்து அவரது ஆன்மா நிறையமைதி பெற இறைவேண்டல் செய்துள்ளனர்.

சீனாவில், கத்தோலிக்கர்கள் கோவில்களில் ஒன்றுகூடி இறைவேண்டல் செய்தும், சமூக ஊடகங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்தும் இரங்கல் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது, ஒரு நல்ல மேய்ப்பரை தாங்கள் இழந்துவிட்டதாகக் கூறி தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

“திருத்தந்தையின் இந்த மறைவு என்பது, ஒரு நல்ல மேய்ப்பர் தனது மந்தையை ஆசீர்வதித்த பிறகு விண்ணக வாழ்வை நோக்கிப் புறப்படுவதற்கான ஓர் அடையாளமாக அமைந்துள்ளது” என்று கூறினார் குவாங்டாங் மாநிலத்திலுள்ள ஓர் அருள்பணியாளர்.

கர்தினால் ஸ்டீபன் சோவ் தலைமையில், ஹாங்காங் தலத் திருஅவையில் செலுத்தப்பட்ட அஞ்சலியில்  திருஅவைக்குள் மதங்களுக்கு இடையேயான உரையாடல், அமைதி மற்றும் சீர்திருத்தத்தை ஊக்குவித்ததற்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பாராட்டிய அவர், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மங்கோலியாவிற்குத் திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, அங்கு அவர் சீனக் கத்தோலிக்கர்களிடம் உயையாற்றியதையும் நினைவுகூர்ந்தார்.

ஹாங்காங்கின் ஆங்கிலிகன் பேராயர் Sheng Kung Hui  அவர்கள், மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை உத்வேகம் தரும் சிறந்ததொரு தலைவராகவும், கிறிஸ்தவ ஒன்றிப்புசார் நபராகவும் நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்தார்.

சீனாவின் அழுத்தத்தையும் மீறி வத்திக்கானுடன் தூதரக உறவுகளைப் பேணி வரும் தைவானும் திருத்தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஏப்ரல் 2025, 16:12