MAP

3-வது நாளாக திருத்தந்தைக்காக செபமாலை இறைவேண்டல்

ஏப்ரல் 23, இப்புதன்கிழமை மாலையில், உரோமை புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறுதல் பெறவேண்டி செபமாலை இறைவேண்டல் பவனி ஒன்றை வழிநடத்தினார் கர்தினால் பல்தசாரே ரெய்னா.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 21, இத்திங்களன்று, வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைபதம் அடைந்ததிலிருந்து அவரது ஆன்மா இறைவனில் நிறையமைதி அடைய மூன்றாவது நாளாக உரோமை புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் இணைந்து வந்து ஜெபமாலை ஒப்புக்கொடுக்கப்பட்டு இறைவேண்டல் செய்யப்பட்டது.

புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலின் இணைத்தலைமைக்குரு கர்தினால் பல்தசாரே ரெய்னா அவர்கள், ஏப்ரல் 23, இப்புதன்கிழமை மாலை, திருத்தந்தையின் மறைவால் துயருறும் அனைத்து விசுவாசிகளையும் ஆறுதல்படுத்தி இந்தச் செபமாலை பவனியைத் தொடங்கிவைத்தார்.

எம்மாவு சீடர்களைப் போலவே, சோதனையின் தருணங்களில் இயேசுவை அடையாளம் காண்பதில் இருந்து நம் கண்களும் தடுக்கப்படலாம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டி அவர்களை நம்பிக்கையுடன் இருக்குமாறு தனது தொடக்க உரையில் கேட்டுக்கொண்டார்.

மேலும் "துன்பம் மற்றும் மரணத்தின் அர்த்தத்தை கேள்வி கேட்பவர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் தொடர்ந்து புதிய பதிலைக் கொண்டு வருகிறது" என்று கூறிய கர்தினால் ரெய்னா அவர்கள், "துன்பத்தால் சோதிக்கப்பட்டு அணைக்கப்பட்ட இதயத்தை ஒளிரச் செய்ய, விசுவாசம் என்னும் ஒளி அனுமதிக்கும்போதுதான் அது மீண்டும் எரியத் தொடங்குகிறது" என்று அவர்களுக்கு விளக்கினார்.

துயரமான இவ்வேளையில், இந்த வலியை நம்பிக்கையாக மாற்றவும், வாழ்க்கை - மரணம் அல்ல - இறுதி வார்த்தை என்று விசுவாசம்கொள்ள உதவவும், உரோமை மக்களுக்கு நலமளிக்கும் அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்ய அனைவருக்கும் அழைப்புவிடுத்தார் கர்தினால் ரெய்னா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஏப்ரல் 2025, 16:10