ஆசிய மக்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேரக்காணல் ஒன்றில், மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசிய மக்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் மியான்மாரின் கர்தினால் சார்லஸ் மாங் போ.
மியான்மார் மக்கள் உட்பட, ஒதுக்கப்பட்டவர்கள், துன்பப்படுபவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களுடன் ஆழமாக இணைந்த ஓர் இரக்கமுள்ள தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளங்கினார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் போ.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இறுக்கமான சூழலை எதிர்கொண்ட போதிலும், கடந்த 2017-ஆம் ஆண்டு மியான்மாருக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதையும், தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் அந்நாட்டின் துயரம் குறித்து அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்த்ததையும் இந்த நேர்காணலில் நினைவுகூர்ந்துள்ளார் கர்தினால் போ.
இறைவேண்டல்கள், அமைதிக்கான பொது வேண்டுகோள்கள் மற்றும் மனிதாபிமான அடையாளங்கள் வழியாக மியான்மாருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்த நிலையான ஆதரவை அதிலும் குறிப்பாக, அவரது வாழ்வின் இறுதி நாள்களில் கூட அவர் அளித்த ஆதரவை குறிப்பிட்டுக் காட்டியுள்ளார் கர்தினால் போ.
சிறப்பாக, திருத்தந்தையின் ஒன்றிப்பு வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, செயல்களிலும் வெளிப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், இவ்வாண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற பேரழிவு தரும் நெருக்கடிகளின் போது அவர் வழங்கிய ஆன்மிக மற்றும் பொருள் ரீதியான ஆதரவையும் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
ஏழைகளை அரவணைத்து, ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாத்து, நற்செய்தியின் அழைப்பின் பேரில் திருஅவையை மீண்டும் மையப்படுத்திய தலைவராக, விளிம்புநிலை மக்களின் இறைவாக்கினராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நினைவுகூரப்படுகிறார் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார் கர்தினால் போ.
ஆசியா மற்றும் ஓசியானியா மீதான அவரது ஆழ்ந்த அக்கறை, பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவித்தல் மற்றும் உலகளாவிய உடன்பிறந்த உறவு, சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் நற்செய்தியை மையமாகக் கொண்ட அவரது வாழ்க்கை முறை ஆகிய அனைத்தையும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்காக உலகமே துயரத்தில் மூழ்கியிருக்கும் இவ்வேளையில், குணப்படுத்துதல், ஒன்றிணைத்தல் மற்றும் துணிவுடன் அன்புகூர்தல் ஆகிய அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர அவரது ஆன்மா நம்மை அழைக்கிறது என்று கூறி தனது நேர்காணலை நிறைவுசெய்துள்ளார் கர்தினால் போ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்