MAP

இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

ஆசிய கிறிஸ்தவர்கள் திருத்தந்தையின் மறைவிற்கு அஞ்சலி !

ஆசியா முழுவதிலுமிருந்து கிறிஸ்தவத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து வந்துள்ள இரங்கல் செய்திகளில் பணிவு, இரக்கம், ஏழைகளுக்கான ஆதரவு, அமைதி, ஒன்றிப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான அர்ப்பணிப்புக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 21, இத்திங்களன்று, வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 88-வது வயதில் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, ஆசியா முழுவதிலுமிருந்து கிறிஸ்தவத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து இரங்கல் செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த இரங்கல் செய்திகளில் பணிவு, இரக்கம், ஏழைகளுக்கான ஆதரவு, அமைதி, ஒன்றிப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான அர்ப்பணிப்புக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளார்.

இந்தியா:

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "இந்தியத் தலத்திருஅவையை ஆழமாக ஆட்கொண்ட உண்மையான மேய்ப்பர்" என்று கோவா மற்றும் டாமன் பேராயர் ஃபிலிப் நேரி ஃபெராவ் அவர்கள் வர்ணித்துள்ளதுடன், இந்தியாவில் ஐவரை அவர் புனிதர் நிலைக்கு உயர்த்தியது மிகவும் குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசம் : 

"அமைதி மற்றும் ஒற்றுமையின் கலங்கரை விளக்கம்" என்று வங்கதேசத் தலைவர்கள் அனைவரும் பாராட்டியுள்ள அதேவேளையில், கத்தோலிக்கத் திருஅவை சிறப்பு திருப்பலிகளைத் திட்டமிட்டது என்றும், கடந்த 2017-ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் கிறிஸ்தவச் சிறுபான்மையினருக்கு ஒரு வரலாற்றுத் தருணமாகக் காணப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

பாகிஸ்தான்:

பாகிஸ்தான் கத்தோலிக்க மற்றும் சீர்திருத்தத் திருஅவையின் தலைவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கம், ஏழைகள் மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலில் கவனம் செலுத்தினார் என்றும்,  "கள மருத்துவமனை" திருஅவை (field hospital) பற்றிய அவரது கருத்து ஊக்கமளிப்பதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.

தாய்லாந்து:

தாய்லாந்து நாட்டிற்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  திருத்தூதுப் பயணம், அர்த்தமுள்ளதாகவும், ஒன்றிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது என்பதை நினைவுகூர்ந்து அவரது மறைவிற்கு அந்நாடு இரங்கல் தெரிவித்துள்ளது.

கொரியா:

கொரிய தீபகற்பத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை அமைதியை ஏற்படுத்துவதாகவும், ஆதரவளிப்பதாகவும், குறிப்பாக இளையோருக்கு பெரும் உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது என்று கூறி அந்நாடு அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

ஜப்பான்:

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒன்றிணைந்த பயணத்தின் தலைமைத்துவ பாணியையும், 2019 -ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய அவரது திருத்தூதுப் பயணத்தையும் எடுத்துரைத்துள்ள கர்தினால் டர்சிசியோ ஈசவ் கிகுச்சி அவர்கள், திருத்தந்தையின் மேய்ப்புப் பராமரிப்பு ஜப்பானின் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் இதயங்களை ஆழமாகத் தொட்டது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

சிȨகப்பூர்:

சுற்றுச்சூழல் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களை ஒன்றிணைப்பவராகவும், அவர்களுக்கு ஆதரவளிப்பவராகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை எடுத்துக்காட்டி தனது இரங்கல் செய்தியில் பாராட்டியுள்ளார் கர்தினால் வில்லியம் கோ செங் சாய்

மலேசியா:

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவியத் தார்மீகத் தலைவராக விளங்கினார் என்றும், பல்வேறு மத நம்பிக்கைகளுக்கு இடையே உறவு பாலத்தைக் கட்டியெழுப்பக் கூடியவராக இருந்தார் என்றும் பாராட்டி தனது இரங்கல் செய்தியைப் பதிவு செய்துள்ளார் மலேசியாவின் பிரதமர் அன்வார் இப்ராஹிம்.

பிலிப்பீன்ஸ் :

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒன்றிணைந்த பயணம், வறுமை, சூழலியல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியத்தன்மை குறித்த அவரதுப் படிப்பினைகளைப் பாராட்டியுள்ளதுடன், அந்நாட்டின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர் அளித்த ஆதரவுவையும் போற்றி தங்களின் இரங்கல் செய்தியைத் தெரிவித்துள்ளனர் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.

இந்தோனேசியா:

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிவு மற்றும் எளிமையைப் பற்றி, குறிப்பாக 2024-ஆம் ஆண்டு இந்தோனேசியாவிற்கு அவர் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து நினைவுகூர்ந்த அதன் தலத் திருஅவைத் தலைவர்கள், அவரது முன்மாதிரியான வாழ்வு உலகளாவிய தாய்த் திருஅவையை சேவைக்கான மையமாக மாற்றியது என்று தங்கள் இரங்கல் செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

கிழக்கு திமோர் :

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமைதி மற்றும் நீதியின் துணிச்சலான குரலாக ஒலித்தவர் என்று அவரை நினைவு கூர்ந்துள்ள கிழக்கு திமோர் தலைவர்கள், அவரது திருத்தூதுப் பயணம், மக்கள் மீது ஆழமான உணர்வுமிகு மற்றும் ஆன்மிக தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் தங்கள் இரங்கல் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளனர்

இறுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மரபு, இரக்கமுள்ள தலைமைத்துவம், ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்தல் மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புக்கான துணிச்சலான அழைப்பு அனைத்தும் ஆசிய மக்களின் நல்லுள்ளங்களைக் கொள்ளைகொண்டுள்ளன என்பதை ஆசியா முழுவதிலுமுள்ள  கிறிஸ்தவத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்டுள்ள இந்த இரங்கல் செய்திகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஏப்ரல் 2025, 16:08