வரலாற்றுச் சிறப்புமிக்க 'Statio Orbis' எனும் இறைவேண்டலின் ஐந்தாவது ஆண்டு நிறைவு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கோவிட்-19 பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தில், மார்ச் 27, 2020 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்திய வரலாற்று சிறப்புமிக்க 'Statio Orbis' இறைவேண்டலின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறித்துத் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் திருப்பீடச் சமூகத்தொடர்புத் துறையின் செய்திப் பிரிவுத் தலைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட உலகளாவிய ஊரடங்கு காரணமாக இலட்சக் கணக்கான மக்கள் வீட்டிலிருந்தே பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மழை பெய்யும் ஒரு மாலை வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நிகழ்வை நடத்த, தன்னந்தனியாக புனித பேதுரு பெருங்கோவிலின் படிகளில் ஏறியதையும் நினைவுகூர்ந்துள்ளார் தொர்னியெல்லி.
அன்புக்குரியவர்களின் ஆறுதல் இல்லாமல் பலர் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டதால், புனித பேதுரு சதுக்கம் ஆளரவமின்றி காட்சியளித்தது என்றும், அது அந்தக் காலத்தின் தனிமை மற்றும் அச்சத்தின் அடையாளமாக இருந்தது என்றும் கூறியுள்ளார் தொர்னியெல்லி.
இந்தத் தருணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகத்திற்காக இறைவேண்டல் செய்து, தனது ஆசீரை வழங்கினார் என்பதையும், பெருந்தொற்றின் துன்பத்தில் வாழ்ந்த மக்களுடன் ஒரு வலிமைவாய்ந்த தொடர்பை ஏற்படுத்தினார் என்பதையும் நினைவுகூர்ந்துள்ளார் அவர்.
தனது இறைவேண்டலில், தொற்றுநோய் என்பது தனிப்பட்டவிதத்தில் நம்மை நாமே ஆய்வுக்குட்படுத்த வேண்டிய நேரம் என்பதால், மக்கள் தங்கள் முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்து உண்மையிலேயே முக்கியமானவற்றில் தங்கள் கவனத்தை செலுத்துமாறு திருத்தந்தை விண்ணப்பித்தார் என்றும், நெருக்கடிகள் நம்மை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ மாற்றும் என்று அவர் குறிப்பிட்டார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் தொர்னியெல்லி.
மேலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, உலகம் இந்நோய்த்தொற்றிலிருந்து சிறப்பானதொரு பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை என்றும், தனிமைப்படுத்தப்படல் இல்லையென்றாலும், தொடர்ச்சியான வன்முறை மற்றும் போரால் இவ்வுலகம் போராட்டங்களைச் சந்தித்துக்கொண்டு வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் தொர்னியெல்லி.
உடல்நலக்குறைவு காரணமாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'Statio Orbis' என்னும் இறைவேண்டல் நிகழ்வை இவ்வாண்டு நடத்தமுடியவில்லை என்றாலும், "எது முக்கியம், எது கடந்து செல்கிறது என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரம் இது" என்று அந்த நாளில் அவர் மொழிந்த வார்த்தைகள் மிகவும் பொருத்தமானவை என்பதை அடிக்கோடிட்டுக்காட்டி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் தொர்னியெல்லி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்