திருத்தந்தைக்காக செபிக்க இரஷ்யாவிலிருந்து வந்த திருப்பயணிகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
யூபிலி புனித ஆண்டை முன்னிட்டு, பல்வேறு இரஷ்ய நகரங்களைச் சேர்ந்த தனிநபர்கள் உட்பட 85 இரஷ்ய கத்தோலிக்கத் திருப்பயணிகளைக் கொண்ட குழுவொன்று, மார்ச் 12, இப்புதனன்று, திருத்தந்தைக்காக செபிக்க உரோமைக்கு வந்திருந்தது எனச் செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.
ஆனால் மருத்துவமனையில் திருத்தந்தையைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பேராயர் பாவ்லோ பெஸ்ஸி தலைமையில் அத்திருப்பயணிகள் குழு, திருத்தந்தை உடல்நலம் பெறவேண்டி ஜெமெல்லி மருத்துவமனைக்கு நடந்து சென்று இறைவேண்டல் செய்ய முடிவு செய்ததாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜெமெல்லி மருத்துவமனைக்குச் சென்ற இந்தக் குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உடல்நலம் பெறவேண்டி அம்மருத்துவமனைக்கு வெளியே உள்ள திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் திருவுருவத்திற்கு முன்பு கூடிச் செபித்தது என்றும் உரைக்கிறது அச்செய்தி.
இரஷ்யா, போலந்து, பெலருஸ், ஜெர்மனி மற்றும் ஆர்மீனியா நாடுகளைச் சேர்ந்த அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினரை இந்தத் திருப்பயணக் குழு உள்ளடக்கியுள்ளது.
மார்ச் 10 முதல் 15 வரையிலான இந்தக் குழுவின் திருப்பயணம், பல்வேறு திருத்தலங்களுக்குச் செல்வதையும், இறைவேண்டலில் பங்கேற்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்