MAP

ஜெமெல்லி மருத்துவமனை முன்பு திருத்தந்தை புனித இரண்டாம்  ஜான் பால் திருவுருவச் சிலை முன்பு விசுவாசிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக செபித்தபோது ஜெமெல்லி மருத்துவமனை முன்பு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் திருவுருவச் சிலை முன்பு விசுவாசிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக செபித்தபோது  (AFP or licensors)

சளி காரணமாக மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்நோக்கிய திருத்தந்தை

சளி அடைப்பின் காரணமாக மூச்சுவிடுவதில் திருத்தந்தை சிரமத்தை எதிர்நோக்கியதால், செயற்கையாக அக்சிஜன் வழங்கும் சிகிச்சைமுறை திங்களன்று இடம்பெற்றதாக திருப்பீடத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 3ஆம் தேதி, திங்களன்று இருமுறை சுவாசக் கோளாறு பிரச்சனையைச் சந்தித்ததாகவும், மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட சளி குவிப்பால் இது நேர்ந்ததாகவும் திருப்பீடத்தின் மருத்துவ அறிக்கைத் தெரிவிக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் திருத்தந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகளுக்குப்பின் திருப்பீடத்துறை பிப்ரவரி 14ஆம் தேதியிலிருந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றது.

திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், அதே நாளில் அவர் மூச்சுக் குழாயிலும் நுரையீரலிலும் சளிக் குவிப்புக் காரணமாக மூச்சுவிடுவதில் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும், கருவிகள் வழியாக செயற்கை முறையில் சளி உறிஞ்சப்பட்டு அகற்றப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருமுறை மூச்சுக் குழாய் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சளி அடைப்பு அகற்றப்பட்டதாகவும், சளி அடைப்பின் காரணமாக மூச்சுவிடுவதில் அவர் சிரமத்தை எதிர்நோக்கியதால், செயற்கையாக அக்சிஜன் வழங்கும் சிகிச்சைமுறை திங்களன்று இடம்பெற்றதாகவும் திருப்பீடத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது.

மருத்துவ பரிசோதனைகளின்போதும், ஏனைய நேரங்களிலும் திருத்தந்தை விழிப்புடனும், தனக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து அறிந்தவராகவும், அவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவராகவும் இருப்பதாகக் கூறும் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை, அவர் உடல்நிலை தொடர்ந்து மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கிறது.

திருத்தந்தையின் இரத்த பரிசோதனைகளின் மதிப்பு அளவீடுகள் மாறாமல் தொடர்ந்து சீராக, அதாவது எவ்வித புதிய தொற்றும் இன்றி இருப்பதாகக் கூறும் அறிக்கை, சளி குவிப்பு தொடர்புடைய பிரச்சனை மீண்டும் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

மார்ச் 4, செவ்வாய்க்கிழமை காலை திருப்பீடம் வெளியிட்ட அறிக்கையில், திங்கள் இரவு முழுவதும் திருத்தந்தை நன்றாக நித்திரைக் கொண்டதாகவும், தற்போது அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 மார்ச் 2025, 09:00