திருத்தந்தையின் மார்ச் மாத செபக் கருத்து!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மன்னிப்பின் வழியாகவும், ஒவ்வொருவரும் கொண்டுள்ள தனித்துவம் என்னும் கடவுளின் அருள்கொடையை மீண்டும் கண்டுகொள்வதன் வழியாகவும், உடைந்த குடும்பங்கள் தங்கள் காயங்களுக்கு மருந்தைக் கண்டுபிடிக்க ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 04, இச்செவ்வாய்க்கிழமையன்று வழங்கியுள்ள இம்மாதத்திற்கான தனது செபக் கருத்தில் இவ்வாறு இறைவேண்டல் செய்ய அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருந்தந்தை பிரான்சிஸ்.
நாம் அனைவரும் ஓர் அழகான, முழு நிறைவான குடும்பத்தைப் பற்றி கனவு காண்கிறோம். ஆனால் ஒரு முழு நிறைவான குடும்பம் என்று எதுவும் இல்லை என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு குடும்பத்திற்கென்று அதன் சொந்த பிரச்சனைகள் உள்ளன என்றும், அதேவேளையில், பெருமகிழ்வுகளும் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் முக்கியமானவர், ஏனென்றால் ஒவ்வொரு உறுப்பினரும் மற்றவர்களை விட வேறுபட்டவர் என்று உரைத்துள்ள திருத்தந்தை, ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர் என்றாலும் இந்த வேறுபாடுகள் மோதல்களையும் வலிமிகுந்த காயங்களையும் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
காயமடைந்த குடும்பத்தின் வலியைக் குணப்படுத்த சிறந்த மருந்து மன்னிப்பு என்றும், மன்னிப்பு என்பது மற்றொரு வாய்ப்பை வழங்குவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கடவுள் இதை எப்போதும் நமக்குச் செய்கிறார் எனவும், கடவுளின் பொறுமை எல்லையற்றது, அவர் நம்மை மன்னிக்கிறார், நம்மை உயர்த்துகிறார், நமக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தருகிறார் எனவும் உரைத்துள்ளார்.
மன்னிப்பு எப்போதும் குடும்பத்தைப் புதுப்பிக்கிறது, நம்பிக்கையுடன் எதிர்நோக்க வைக்கிறது என்று உரைத்துள்ள திருத்தந்தை, நாம் விரும்பும் மகிழ்ச்சியான முடிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லாவிட்டாலும், கடவுளின் அருள் மன்னிக்க நமக்கு வலிமையத் தருகிறது எனவும், மேலும் அது அமைதியைக் கொண்டுவருகிறது, ஏனெனில் அது நம்மை சோகத்திலிருந்தும், எல்லாவற்றிற்கும் மேலாக, வெறுப்பிலிருந்தும் நம்மை விடுவிக்கிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்