MAP

காசா பகுதியில் போரின் விளைவுகள் காசா பகுதியில் போரின் விளைவுகள்  (AFP or licensors)

அமைதி மற்றும் ஆயுதக் களைவுக்கான திருத்தந்தையின் அழைப்பு

வார்த்தைகள் என்பவை இணைக்கவும் பிரிக்கவும் வல்ல ஆற்றல் பெற்றவை, முதலில் வார்த்தைகளிலிருந்தும், நம் மனங்களிலிருந்தும், பின்னர் உலகிலிருந்தும் ஆயுதக் களைவை செயல்படுத்த வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அமைதி மற்றும் ஆயுதக் களைவுக்கான தன் அழைப்பை மீண்டும் ஒருமுறை விடுப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலியப் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பியுள்ளச் செய்தியில் கூறியுள்ளார்.

திருத்தந்தை விரைவில் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்து இத்தாலியின் ‘கொரியேரே தெல்லா சேரா’ என்ற தினத்தாளின் முதன்மை ஆசிரியர் Luciano Fontana என்பவர் அனுப்பியுள்ள செய்திக்கு பதில் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி மற்றும் ஆயுதக் களைவுக்கான தன் அழைப்புக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுமாறு கேட்டுள்ளார்.

போர் என்பது முட்டாள்தனமானது என ஏற்கனவே கூறியதையே மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எது வாழ்வைக் கொணரும், எது வாழ்வைக் கொல்லும் என்ற உண்மையை நாம் அறிந்துள்ளதால், நாம் தனியாகவோ அல்லது சமூகமாகவோ எடுக்கும் பாதை குறித்த கேள்வி எழுப்பும் வல்லமை மக்களுக்கு உள்ளது என மேலும் கூறியுள்ளார்.

வார்த்தைகளுக்கு இருக்கும் வல்லமை குறித்தும் தன் செய்தியில் குறிப்பிடும் திருத்தந்தை, வார்த்தைகள் என்பவை மனித குலத்தின் சூழலை வடிவமைப்பவை, மற்றும் அவை இணைக்கவும் பிரிக்கவும் வல்ல ஆற்றல் பெற்றவை, எனவே, முதலில் வார்த்தைகளிலிருந்தும், நம் மனங்களிலிருந்தும், பின்னர் உலகிலிருந்தும் ஆயுதக் களைவை செயல்படுத்த வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

போர் என்பது முரண்பாடுகளுக்கு எவ்வித தீர்வுகளையும் வழங்காமல், சமுதாயங்களையும் சுற்றுச்சூழலையும் அழித்துவருவதால், உடன்பிறந்த உணர்வு, நீதி, எதிர்நோக்கு மற்றும் அமைதிக்கான ஆவல் நம்மில் எழுப்பப்பட்டு, அர்ப்பணத்துடன் பணிபுரிவதற்கான முயற்சிகள் இடம்பெறவேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மார்ச் 2025, 10:46