111-ஆவது உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தின மையக்கருத்து
மெரினா ராஜ் - வத்திக்கான்
2025ஆம் ஆண்டிற்கான உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்திற்கான மையக்கருத்தாக “புலம்பெயர்ந்தோர், எதிர்நோக்கின் மறைப்பணியாளர்கள்” என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார்.
மார்ச் 3, திங்கள்கிழமை வெளியிட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2025 - ஆம் ஆண்டிற்கான உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினமானது அக்டோபர் மாதம் யூபிலி ஆண்டோடு சிறப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டு #GMMR2025 (World Day of Migrants and Refugees) அக்டோபர் மாதம், யூபிலி ஆண்டு# என்று தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
ஏராளமான புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தங்களது வாழ்வில் கடவுளை அதிகதிகமாக நம்பியிருக்கின்றனர் என்றும், தங்களது இத்தகையக் கடவுள் நம்பிக்கையின் வழியாக எதிர்நோக்கின் சான்றுகளாகத் திகழ்கின்றார்கள் என்றும் அக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போர்கள், மோதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் புலம்பெயர்ந்துள்ள மக்களைக் கத்தோலிக்கர்கள் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்க வேண்டும் என்பதற்காக 1914-ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான உலக நாள் கொண்டாடத் துவங்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினம் இவ்வாண்டு அக்டோபர் மாதம் 4,5 ஆகிய நாள்களில் யூபிலி நாள்களாக சிறப்பிக்கப்பட இருப்பதாகக் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்