தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தந்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
வடக்கு மச்சதோனியாவின் கோக்கனி கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆன்மிக உடனிருப்பையும் வழங்குவதாக இரங்கல் தந்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஏறக்குறைய 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் செபத்தையும் எடுத்துரைக்கும் திருத்தந்தையின் தந்தியானது, SKOPJE மறைமாவட்ட ஆயர் KIRO STOJANOV அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இளையோர் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து இரங்கலைத் தெரிவிப்பதாகவும், ஆன்மிக உடனிருப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், இறந்தவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவனின் பாதுகாப்பும், ஆறுதலும் கிடைக்கப்பெற தொடர்ந்து செபிப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
ஐரோப்பிய நாடான வடக்கு மச்சதோனியாவின் ஸ்கோப்ஜே பகுதியில் உள்ள கோக்கனி கேளிக்கை விடுதியில், மார்ச் 16, ஞாயிறு அன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை ஏறக்குறைய 51 பேர் இறந்துள்ளனர் என்றும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் ஸ்கோப்ஜேவிலிருந்து ஏறக்குறைய நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோக்கனி நகரில் அமைந்துள்ள ‘பல்ஸ் கிளப்’ என்ற கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டிடம் முழுவதும் தீக்கிரையாகியுள்ளது, ‘ஏடிஎன்’ எனும் புகழ்பெற்ற இசைக்குழுவின் நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டிருந்தவர்களில் பலர் தீவிபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தீ விபத்திற்கான காரணம் வான வேடிக்கையாக இருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்